கடந்த சில காலமாக தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்ட ஹன்ஷிகா தற்போது அடுத்தடுத்து படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதர்வாவின் ‘100′, UR.ஜமீலின் ‘மஹா’ என 3 படங்கள் உள்ளது. இதில் ‘மஹா’ க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகுகிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இந்த படத்தை ‘Etcetera எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இது நடிகை ஹன்ஷிகாவின் கேரியரில் 50-வது படமாம். இப்படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இதற்கு ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜான் அப்ரஹாம் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. அதில் ஒரு போஸ்டரில் ஹன்ஷிகா சுருட்டு புகைத்தபடி போஸ் கொடுத்திருந்தார். தற்போது, “இப்போஸ்டர் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. ஆகையால், நடிகை ஹன்ஷிகா மற்றும் இப்படத்தின் இயக்குநர் UR.ஜமீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கபட்டுள்ளது.
முன்னதாக படத்தின் போஸ்டர் குறித்து விளக்கம் அளித்திருந்த படத்தின் இயக்குநர் ஜமீல், “ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சாதி அல்லது மதம் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. நான் இந்து, முஸ்லிம் என்பதைவிட மனிதம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். புகைப்பிடிக்கும் படத்தை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்க வேண்டும். தயவு செய்து சாதி, மத கோணத்தில் இதை அணுக வேண்டாம்” என்று கூறியிருந்தார்