தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சந்தானம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது சந்தானம் நடிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் இங்க நான் தான் கிங்கு’. இந்த படத்தில் பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் தயாரித்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் சந்தானம் திருமணம் ஆகாமல் கஷ்டப்படுகிறார். சந்தானம் மேட்ரிமோனியில் வேலை பார்க்கிறார். திருமணம் நடக்க வேண்டும் என்றால் சொந்தமாக வீடு வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இதனால் கடனை வாங்கி சந்தானம் வீடு கட்டி தவிக்கிறார். இவருக்கு 25 லட்சம் கடன் இருக்கிறது. இந்த கடனை அடைக்க முன்வரும் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என சந்தானம் நினைக்கிறார்.
ஒரு வழியாக ஜமீன் குடும்பத்தில் இருக்கும் ஹீரோயினுடன் சந்தானத்திற்கு திருமணம் நடக்கிறது. ஆனால், இந்த திருமணத்தில் சந்தானத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைக்கிறது. பின் தனக்கு கடன் கொடுத்த மேனேஜருடன் சந்தானத்திற்கு பிரச்சனை ஏற்படுகிறது. பின் சந்தானம் குடும்பம் அவரை கொலை செய்து விடுகிறார்கள். ஒரு வழியாக இந்த கொலையை எல்லாம் மறைத்துவிட்டு சந்தானம் சென்று விடுகிறார்.
பிறகு வீட்டில் வந்து பார்த்தால் அதே மேனேஜர் சந்தானம் வீட்டில் உயிருடன் இருக்கிறார். சந்தானம் கொன்றது யாரை? மேனேஜர் உயிருடன் வந்ததன் காரணம் என்ன? சந்தானம் கடன் பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் நீதி கதை. படத்தில் சந்தானம் தனது கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடியாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர்.
அதோடு படத்தில் நிறைய காமெடி கதாபாத்திரங்களை இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஆனால், சில காட்சிகள் எல்லாம் பழைய படங்களை தான் நினைவுக்கு கொண்டு வருகிறது. சந்தானம், தம்பி ராமையா பாலசரவணன் கூட்டணி காமெடி நன்றாக இருக்கிறது. காமெடி மட்டும் இல்லாமல் டான்ஸ்சிலும் சந்தானம் மாசு காட்டியிருக்கிறார். ஹீரோயினி இன்னும் கொஞ்சம் தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
சமீப காலமாகவே சந்தானம் படத்தில் காமெடிகள் சொதப்பி வந்திருந்தது. ஆனால், இந்த படத்தில் ஓரளவு தீர்த்து வைத்து மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். படம் முழுக்க காமெடியாகவே சென்றிருக்கிறது. ஆனால், சீரியஸான காட்சிகள் கூட காமெடியாக சொல்லி இருப்பது கொஞ்சம் சொதப்பி இருக்கிறது. முதல் பாதி வேகமாக சென்றது. ஆனால், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு குறைந்து விட்டது. இமானின் உடைய பின்னணி இசை நன்றாக இருக்கிறது. படத்தில் சில இடங்களில் குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று ரசிக்கும்படி ஒரு சுமாரான படமாக இருக்கிறது.
நிறை:
சந்தானம் நடிப்பு சிறப்பு
கதைகளம் நன்றாக இருக்கிறது
முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
முழுக்க முழுக்க காமெடி படம்
குறை:
இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
இரண்டாம் பாதி பொறுமையாக செல்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சீரியசான காட்சியை கூட காமெடி பாணியில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்
மொத்தத்தில் இங்க நான் தான் கிங்கு- காமெடிக்கு பஞ்சமில்லை.