தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக சூர்யா ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் சமீபகாலமாக சூர்யா அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து உள்ளார். அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது. மேலும், பழங்குடியினர் பெண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார்.
இந்த படத்தை பார்த்துவிட்டு தன்னால் தூங்க முடியவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதே போல பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யாவும் 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருந்தார். இப்படி ஒரு நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள சூர்யா, மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது.
மேலும் எளியமக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார்.