நமது மண் சார்ந்த கலை தெருக்கூத்து. இக்கலையை மயப்படுத்தி வந்துள்ளது ‘ஜமா’ திரைப்படம். இப்படத்தில் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ளார். மேலும் சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயால், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், ஏ.கே. இளவழகன், காலா குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் ஜமாத்ததா, இல்லையா என்று பார்க்கலாம்.
கதைக்களம்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பட்டு கிராமத்தில் வசிக்கும் ஹீரோ கல்யாணத்தின்(பாரி இளவழகன்) தந்தைக்கு தெருக்கூத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை. ஒரு ஜமாவில் சேர்ந்து கூத்தை கற்றுக் கொள்கிறார். ஜமா என்றால் தெருக்கூத்து குழு. பின் தன் நண்பன் தாண்டவனுடன்( சேத்தன்) சேர்ந்து ஒரு புதிய ஜமா ஆரம்பிக்கிறார்கள். தாண்டவன் கல்யாணத்தின் தந்தையை ஏமாற்றி ஜமாவை கைப்பற்றி கூத்து வாத்தியார் ஆகிறார். இதனால் மணமுடைந்த கல்யாணத்தின் அப்பா இறந்து விடுகிறார். அதற்குப் பின் கல்யாணம் தாண்டவனின் ஜமாவில் சேர்ந்து மகாபாரத கூத்தில் திரௌபதி வேஷம் போட்டு நடிக்கிறார்.
கல்யாணம் தொடர்ந்து திரௌபதி வேஷம் கட்டுவதால் கல்யாணத்தின் நடை, உடை, பாவணையில் ஒரு பெண் தன்மை ஏற்பட்டு விடுகிறது. இதனால் இவரை ஊர் கேலி செய்கிறது. கல்யாணத்தை எந்தப் பொண்ணும் திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்ள மாட்டார்கள். பின் கல்யாணம் தான் திரௌபதி வேஷம் கட்டுவது தான் இதற்கு காரணம் என நினைத்து, இனிமேல் அர்ஜுனன் வேஷம் கட்ட நினைக்கிறார். தன் விருப்பத்தை வாத்தியார் தாண்டவத்திடம் சொல்ல, அவர் கல்யாணத்தை அவமானப்படுத்தி அனுப்புகிறார். பின் அர்ஜுனன் வேஷம் கட்ட கல்யாணம் எடுக்கும் முயற்சிகள் தான் படத்தின் மீதி கதை.
படத்தின் இயக்குனரும் ஹீரோவும் ஆன பாரி இளவழகன் இதற்கு முன் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், ஜமா படத்தில் ஜமாய்த்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில், சேர்த்தனின் நடிப்பை பார்த்தால் தமிழ் சினிமா இதுவரை இவரை முழுமையாக பயன்படுத்தவில்லையோ என்று தோன்றும். பாரியின் பெற்றோராக நடிப்பவர்கள் மற்றும் அம்மு அபிராமி இந்தப் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளார்கள். பின் இளையராஜாவின் இசை இப்படத்திற்கு கூடுதல் பலம் என்று சொல்லலாம்.
நிறை:
இளையராஜாவின் இசை அருமை.
சேத்தன் நடிப்பு மாஸ்.
நடிகர்களின் தேர்வு சிறப்பு.
மண்வாசனை நிறைந்த படம்.
குறை:
கமர்சியல் ரீதியாக வெற்றி பெறுமா என்ற சந்தேகம் உள்ளது.
இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது.
படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய குறைகள் எதுவும் இல்லை.
இறுதி அலசல்:
தமிழ் சினிமாவில் இருவகையான படங்கள் உருவாக்கப்படுகிறது. ஒன்று கமர்ஷியல் ரீதியாக எடுக்கப்படுவது. மற்றொன்று சினிமாவை கலையாக நேசித்து எடுக்கப்படுவது. கமர்சியல் ரீதியாக இப்படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்தாலும், கலையை நேசிப்பவர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும். இதுவரை தெருக்கூத்தை பார்க்காதவர்கள் கூட இப்படத்தைப் பார்த்தால், தெருக்கூத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். அந்த வகையில் கலையின் ரசிகர்களாக ஜமா திரைப்பட குழு வென்றுவிட்டது.
மொத்தத்தில் ‘ஜமா’ திரைப்படம் ஜமாய்த்து விட்டது.