கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது.

இந்த விழாவிற்கு தக் லைப் பட குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் வருகை தந்திருந்தார். அப்போது விழாவில் சிவராஜ் குமாரை பார்த்து கமல், உயிரே உறவே தமிழே. ரசிகர்களாகிய உங்களின் பிரதிநிதியாக கன்னட சூப்பர் ஸ்டார் இங்கு வந்திருக்கிறார். ஆனால், அவர் இங்கு தன்னை சூப்பர் ஸ்டாராக அடையாளப்படுத்தவில்லை. என் மகனாக, என் ரசிகனாக, உங்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறார். இந்த அன்புக்கு நான் எப்படி அடிபணியாமல் இருக்க முடியும்? சிவராஜ்குமார் மற்றொரு மாநிலத்தில் வாழும் என்னுடைய குடும்பம். அதனால் தான் உயிரே உறவே தமிழே என்று பேச தொடங்கினேன். உங்களுடைய பாசை தமிழில் இருந்து வந்தது.
தக் லைஃப் படம்:
எனவே முதல் வரி உங்களையும் சேர்த்தது என்று கூறி இருந்தார். இப்படி கமலஹாசன் பேசியிருந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. காரணம், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று அவர் கூறியிருப்பார். இதனால் கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் வெடித்திருக்கிறது. கன்னட ரக்ஷனா வேதிகே உள்ளிட்ட தீவிர கன்னட இயக்கங்கள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து எச்சரிக்கை விட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் கன்னட அமைப்புகள் தக் லைப் படத்தினுடைய போஸ்டர்களையும் கிழித்து இருந்திருக்கிறார்கள்.

கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள்:
இந்த நிலையில் இது தொடர்பாக கன்னட ரக்ஷனா வேதிகே தலைவர், கன்னடா தமிழுக்கு பிறகு பிறந்ததாக கூறியிருக்கிறார். உங்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு கர்நாடகாவில் தொழில் வேண்டுமா? இருந்தும் கன்னடத்தை அவமதிப்பீர்களா? இதே நீங்கள் கர்நாடகாவில் இருந்திருந்தால் உங்கள் மீது கருப்பு மை வீச தயாராக இருந்திருப்போம். கர்நாடகாவுக்கும் மாநில மக்களுக்கும் எதிராக பேசினால் உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம் என்று கூறி இருக்கிறது. இதை அடுத்து கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

கமலுக்கு விடுத்த எச்சரிக்கை:
இதற்கு கமலஹாசன் தரப்பில் விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காவிட்டாலும் கர்நாடகாவில் அவருடைய படங்களை புறக்கணிக்க போகிறோம் என்று சில அமைப்புகள் அழைப்பும் விடுத்திருக்கின்றது. இதை அடுத்து பாஜக கர்நாடக மாநில தலைவர், கமலஹாசனின் நடத்தை நாகரீகம் அற்றது. ஆணவமான பேச்சு. சிவராஜ்குமாரை அழைத்து தமிழை புகழ்ந்தவர் மட்டுமில்லாமல் கன்னடத்தை அவமதித்து இருக்கிறார். கன்னட படங்களில் நடித்துள்ள கமலஹாசன் நன்றி உணர்வில்லாமல் இருக்கிறார். இதற்கு முன் இந்துத்துவத்தையும், மத உணர்வுகளையும் கமல் புண்படுத்தி இருந்தார். இப்போது 6.5 கோடி கன்னட மக்களைப் புண்படுத்தி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=a6FWWSO87rU
கமல் விளக்கம்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கமலஹாசன் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர், அரசியல்வாதிகளுக்கு மொழியை பற்றி பேசும் கல்வி தகுதி கிடையாது. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். இந்த ஆழமான விவரங்களை வரலாற்று ஆசிரியர்கள், மொழியியல் வல்லுநர்கள், அகழ்வாராய்ச்சிகளிடம் விட்டுவிடலாம். நான் சிவா அண்ணாவிடம் அன்பின் அடிப்படையில் தான் பேசினேன். நாங்கள் ஒரு குடும்பம், மொழிகளும் அப்படியே தான். நீங்கள் வடக்கில் இருந்து பார்த்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால், நான் தென் குமரியில் இருந்து பார்த்தால் நான் சொல்வதும் சரி. இதற்கு மூன்றாவது குணமும் இருக்கலாம். அதை நான் சொன்னது போல் வல்லுநர்களிடம் விட்டுவிடலாம். குடும்பத்துடன் இருக்க வேண்டுமா? வடக்கிலிருந்து வந்த மொழியை ஏற்க வேண்டுமா? என்பதை அவர்களே சொல்லட்டும். இது ஒரு பதில் அல்ல, விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என்று கூறுகிறார்.






