தமிழில் சிறந்த எழுத்தாளர்களில் அகிலனும் ஒருவர். முதல் ஞானபீடம் என்ற விருதை சித்திரப்பாவை நாவலுக்காக இவர் வாங்கி இருந்தார். ஆனால், சித்திரப்பாவை ஒரு நாவலே இல்லை. இதற்கெல்லாம் சிறந்த படைப்பு என்ற பெயரில் விருது கிடைத்தால் மற்ற மொழிக்காரர்கள் மட்டமாக பேசுவார்கள் என்று பலரும் விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், இவர் படைப்பில் பல நாவல்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில் 1957 இல் அகிலன் எழுதிய நாவலில் ஒன்று தான் பாவை விளக்கு.
இந்த நாவல் கல்கியில் தொடராக எழுதி இருந்தார். எழுத்தாளர் தான் அதில் கதாநாயகன். கிட்டதட்ட அது அகிலனின் வாழ்க்கை நிகழ்வுகளை சித்தரிக்கும் நாவலாக இருந்தது. கல்கியில் இந்த தொடர் வெளியான போது ஏராளமான மக்கள் வாசித்தனர். பின் ஜுபிடர் பிக்சர்ஸ் சோமசுந்தரம் அகிலனை தொடர்பு கொண்டு பாவை விளக்கை திரைப்படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அதற்கு பிறகு தன்னுடைய இயக்குனர் நண்பர் கே சோமுவிடம் அகிலன் தெரிவித்தார்.
பாவை விளக்கு படம்:
இதனை அடுத்து ஏ பி நாகராஜன் பாவை விளக்கு நாவலை திரைப்படமாக எடுக்க முன்பணம் தந்து பாவை விளக்கு உரிமையை பெற்றுக்கொண்டார். நாகராஜன், கே சோமு, எடிட்டர் விஜயரங்கம் ஆகிய மூவரும் விஜயகோபால் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பாவை விளக்கு எடுத்தனர். சிவாஜி, பண்டரி பாய், குமாரி கமலா, சௌகார் ஜானகி, எம்.என்.ராஜம் போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஓடி இருந்தது.
குலமகள் ராதை படம்:
மேலும், இந்தப் பாவை விளக்கு அண்டர் ப்ரொடக்ஷனில் இருந்தபோது அகிலனின் வாழ்வு எங்கே? நாவலை திருச்சி ஸ்பைடர் பனியன் நிறுவனத்தின் நிறுவனத்தினர் உரிமை வாங்கி திரைப்பட வேலைகளை தொடங்கி இருந்தார்கள். படத்திற்கு குலமகள் ராதை என பெயர் வைத்திருந்தார்கள். பாவை விளக்கில் நடித்த சிவாஜியே இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவருடன் தேவிகா, சரோஜாதேவி நடித்திருந்தார்கள்.
படம் குறித்த தகவல்:
ஏபி நாகராஜன் திரைக்கதை, வசனத்துடன் இயக்குனர் பொறுப்பையும் ஏற்று செய்திருந்தார். படத்தில் சிவாஜி அச்சக தொழிலாளியாக நடித்திருந்தார். சர்க்கஸில் அவர் சாகசம் செய்யும் காட்சிகளும் இருக்கிறது. ஆனால், அந்த காட்சிகள் எல்லாம் சினிமாத்தனமாக இருக்கிறது என்று சில பத்திரிகைகள் விமர்சித்திருந்தார்கள். குறிப்பாக, சர்க்கஸ் காட்சி, மருத்துவமனை காட்சிகளையும் விமர்சித்து எழுதியிருந்தார்கள்.
குலமகள் ராதை வெற்றிக்கு காரணம்:
ஆனால், சிவாஜியின் நடிப்பும், ஸ்டைல், தேவிகாவின் அழகும், சரோஜாதேவி நடிப்பும் தான் குலமகள் ராதையை ஓட வைத்தது. அதோடு மகாதேவனின் இசையில் பாடல்கள் படத்திற்கு பக்க பலமாக இருந்தது. இந்த குலமகள் ராதை படம் 1963 ஆம் ஆண்டு ஜூன் ஏழாம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகி 60 வருடத்தை நிறைவு செய்திருக்கிறது.