பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு கன்னட சேனலில், ‘பதுக்கு ஜடக்காபண்டி’ என்ற சட்ட நிகழ்ச்சியை நடத்தினார், மாளவிகா அவினாஷ். பிறகு, பல கன்னடப் படங்களில் நடித்தார். தமிழில் ‘ஜேஜே’ உட்பட எண்ணிக்கையில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் தனக்கான இடத்தைப் பெற்றிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் முடிந்த ‘செல்லமே’ தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். நடிகை, வழக்கறிஞர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்ட மாளவிகாவிற்கு, ‘KGF’ ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் ‘கே.ஜி.எஃப் – இரண்டாவது சேப்டரி’ல் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும்னு இயக்குநர் சொல்லியிருக்கிறார்.
கன்னட சினிமாவைப் பொருத்தவரை, இவ்வளவு கோடி செலவு பண்ணி, இவ்வளவு ஆள்களை வெச்சுப் பண்ண படத்தை இதுவரை யாரும் பார்த்திருக்கமாட்டாங்க. சின்ன மார்க்கெட் உள்ள கன்னடப் படங்களில் இப்படி ஒரு பிரமாண்டத்தைக் கொடுப்பதற்கெல்லாம் மிகப்பெரிய தைரியம் வேணும். அது, பிரஷாத்துக்கு நிறைய இருக்கு. கன்னடத்துல மட்டுமில்ல, படத்தை பல மொழிகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கார். இந்தப் படத்துக்குப் பிறகு, கன்னடத்துல பல பெரிய பட்ஜெட் படங்கள் வரும்னு எதிர்பார்க்கலாம்.
2016-ல் ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட படம் ‘கே.ஜி.எஃப்’. படத்தோட ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு மட்டுமே நிறைய நேரத்தை செலவழிச்சிருக்காங்க. இப்போ, இரண்டாவது சேப்டர்ல, ‘நிறைய வேலைகள் இருக்கும், பல நாள்கள் வேலை பார்க்கவேண்டி இருக்கும்… எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்க’னு சொல்லியிருக்கார், இயக்குநர். ‘கே.ஜி.எஃப் 2’ படமும் பெரிய அளவில் பேசப்படும்!” என்று முடிக்கிறார், மாளவிகா