விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்தின் மீது எல் ஐ சி நிறுவனம் அளித்திருக்கும் நோட்டீஸ் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் போடா போடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.
அதன் பின் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதை அடுத்து விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
விக்னேஷ் சிவன் திரைப்பயணம்;
இந்த படத்திற்கான வேலைகளை விக்னேஷ் சிவன் செய்து இருந்தார். ஆனால், படத்தினுடைய ஒன் லைன் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை என்றவுடன் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய கனவு திரைப்படமான எல்ஐசி என்ற படத்தை எடுக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க வைக்கிறார். மேலும், இந்த படத்தை நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
எல்ஐசி படம்:
பின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகி விட்டது. பின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி செட்டி, எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் விக்னேஷ் மீது வழக்கு தொடர இருப்பதாக இயக்குனர் எஸ் எஸ் குமரன் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
எஸ் எஸ் குமரன் அறிக்கை :
அதில் அவர், விக்னேஷ் சிவன் இயக்கருக்கும் புது படத்திற்கு எல்ஐசி என்று பெயர் வைத்திருப்பதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். எல் ஐ சி என்ற பெயரை 2015 ஆம் ஆண்டு என்னுடைய தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதை அறிந்தும் விக்னேஷ் சிவன் அந்த பெயரை வைத்து இருக்கிறார். அதோடு இந்த தலைப்பை நான் முறைபடியாக பதிவு செய்தும் வைத்திருக்கிறேன். இது சட்டத்திற்கு புறமானது மட்டுமல்ல, எளிய சிறிய தயாரிப்பார்களை நசுக்கும் செயலாகும். இனியும் இந்த செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி இருந்தார்.
எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ்:
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் படக்குழுவுக்கு எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில் எல் ஐ சி என்ற தலைப்பை பயன்படுத்துவதை இயக்குனர் விக்னேஷ் சிவன், பட தயாரிப்பு நிறுவனம் நிறுத்த வேண்டும். ஏழு நாட்களுக்குள் இந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டும். அப்படி மாற்றம் செய்யாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் படக்குழு மீது மேற்கொள்ளப்படும் என்று கூறி இருக்கிறார்கள். இதற்கு படக்குழு என்ன செய்யப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.