ஊர்ல இருந்து பெட்டி படுக்கையுடன் வந்தவங்கள்ல நானும் ஒருத்தன் ! மா.கா.பா ஆனந்த் !

0
650

ஊர்ல இருந்து ஏதாவது சாதிக்கணும்னு சென்னைக்குப் பெட்டி படுக்கையுடன் வந்தவங்களில் நானும் ஒருத்தன். பத்து வருஷம் ஆர்.ஜே, அப்புறம் விஜய் டிவியில ஆங்கர், இப்போ நடிப்புனு ஓடிட்டு இருக்கேன். பல அவமானங்கள், தோல்விகளை எல்லாம் சந்திச்சு ‘நண்பன்’ படத்துல சொல்ற மாதிரி ‘லைஃப் இஸ் எ ரேஸ்’னு வேகமா ஓடிட்டு இருக்கேன் ப்ரதர்’’ என அவருக்கே உரிய உற்சாகக் குரலில் தன் பயணத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் மா.கா.பா ஆனந்த்.
ஆர்.ஜேவா இருந்த உங்களுக்கு வி.ஜே ஆகணும்னு எப்போ தோணுச்சு?

’’ஒரு காலகட்டத்துல லவ் ஃபெய்லியராகி தாடி எல்லாம் வெச்சுட்டு சுத்திட்டு இருந்த சமயம். அப்போ என் நண்பன் சின்னையாதான், ‘நம்ம மத்தவங்க பின்னாடி சுத்திட்டு இருக்கிறதை விட நம்மகிட்ட நீங்க என் வாழ்க்கைத்துணையா வந்தா நல்லாயிருக்கும்னு சொல்ற அளவுக்குப் பெரிய லெவலுக்குப் போகணும்’னு சொல்லிட்டே இருப்பான்.

வாழ்க்கையில பெரிய ஆளாகணும்னா ஒண்ணு பணம் வேணும், இல்லைனா புகழ் வேணும்னு தோணுச்சு. ஒரு ஆஃபிஸுக்குப் போய் வேலை செஞ்சு பணம் சம்பாதிக்கிற அளவுக்குப் பொறுமை கிடையாது. அதனால, நம்ம ஆர்.ஜே ஆனா சரியா இருக்கும்னு தோணுச்சு. மூணு வருஷமா வாய்ப்பு தேடி ஒரு வழியா கிடைச்சு அதுக்குள்ள பத்து வருஷம் ஓடிடுச்சு ப்ரதர். சரி, டிவியில வாய்ப்பு தேடுவோம்னு தேட ஆரம்பிச்சேன். நிறைய இடங்கள்ல என்னை உள்ளேயே விடலை. அப்புறம், என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் விஜய் டிவியில ப்ரோட்யூசரா இருந்தார். அவர் மூலமாதான் ஒரு 20 நிமிஷ நிகழ்ச்சியில கொஞ்ச நேரம் மட்டும் வர வாய்ப்பு கிடைச்சுது. அந்தக் கொஞ்ச நேரம் கிடைக்குற வாய்ப்பை பயன்படுத்திக்கணும்னு ப்ளான் எல்லாம் பண்ணி பாராட்டு வாங்குனேன். அப்படியே கிடைக்கிற வாய்ப்பை மிகச்சரியா பயன்படுத்தணும்னு ஓடி ஒடி இப்போ அந்த சேனல்ல முக்கியமா நாலு பெரிய ஷோல ரெண்டு நான் பண்ணிட்டு இருக்கேன். இதான் ப்ரதர் நீங்க கேட்ட எஸ்.டி.டி (ஹிஸ்டரி).’’
விஜே டு ஹீரோ ஆகணும்னு நீங்க ப்ளான் பண்ணதா. இல்லை உங்களைத் தேடி வந்துச்சா?

‘’நான் ஆர்.ஜேவா இருந்த போது ஒரு இன்டர்வியூக்கு சுந்தர்.சி சார் வந்தார். அவர்தான் ‘நீ படம் பண்ணலாமே. நம்ம படத்துல நடி’னு சொன்னார். ஆனா, ‘சும்மா சொல்லாதீங்க. இப்படித்தான் சொல்வீங்க. அப்புறம், மறந்துடுவீங்க’னு சொல்லி கலாய்ச்சிட்டேன். சரினு அவர் நம்பர் வாங்கி வெச்சிருந்தேன். ஆனா, கால் பண்ணி பேச கூச்சமா இருந்துச்சு. நான் ஹீரோ கேரக்டர் எல்லாம் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை. ஆர்.ஜேவா இருந்த போது ஒரு பெரிய படத்துல சின்னதா ஒரு ரோல் பண்ணா போதும்னு நினைச்சேன். விஜே ஆனதுக்குப் பிறகு அதையும் மறந்துட்டேன். ‘வானவராயன் வல்லவராயன்’ பட டைரக்டர் என்னை அந்தத் தம்பி கேரக்டருக்கு நடிக்க கூப்பிட்டார். அப்படித்தான் சில்வர் ஸ்கிரீன்குள்ள வந்தேன்.’’

அடுத்து என்னா ப்ளான் வெச்சிருக்கீங்க?

’’நான் எந்த ப்ளானும் இல்லாத ஒரு மனுஷன் பாஸ். முயற்சியும் காத்திருத்தலும் தான் எல்லாம். எனக்கு ஒரு விஷயம் பிடிச்சிடுச்சுனா அதனால என்ன ஆனாலும் பரவாயில்லைனு அந்த பிடிச்ச விஷயத்தை பண்ணிடுவேன்.

எனக்கு திடீர் திடீர்னு எதாச்சும் ஐடியா வந்துட்டே இருக்கும். இப்போ வாங்க கிரிக்கெட் விளையாடப்போலாம்னு நீங்க கூப்பிட்டா கூட விளையாடணும்னு மனசுல தோணுச்சுனா உடனே வந்திடுவேன். மத்ததை பத்தியெல்லாம் யோசிக்கவே மாட்டேன். இந்த பழக்கம் இதுவரை எனக்கு உதவி தான் செஞ்சிருக்கு” என்று பேசிவிட்டு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே விடைப்பெற்றார் மா.கா.பா.