உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் மலையாள திரையுலகில் இருந்து ஒரு வருத்தத்திற்குரிய செய்தி ஒன்று வெளி வந்திருக்கிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘பூவள்ளியும் குஞ்சடும்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஃபரூக் அகமதலி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக பேசில் ஜார்ஜ் என்பவர் நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் ஆர்யா மணிகண்டன், கோட்டயம் நசீர், ஷம்மி திலகன், நீனா குருப், மோலி கண்ணமலி, சஜூ கோடியன், அம்பிகா மோகன், நாராயணன் குட்டி, கோச்சு பிரேமன் ஆகியோர் நடித்திருந்தனர்.
கடந்த மே 3-ஆம் தேதி நடிகர் பேசில் ஜார்ஜ் தனது ஐந்து நண்பர்களுடன் காரில் முவட்டுபுழாவில் இருந்து கொலேஞ்சேரி வரை சென்றிருக்கிறார். அப்போது, முவட்டுபுழா அருகே உள்ள மேக்கடம்பு வழியாக சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கு இருந்த மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. கார் மின் கம்பத்தில் மோதியதோடு, அதன் அருகில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் மீதும் மோதி நின்றதாம். அங்கிருந்து மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் வழியிலையே நடிகர் பேசில் ஜார்ஜ் மற்றும் அவரது நண்பர்களான நிதின், அஷ்வின் ஆகிய மூவரும் உயிரிழந்தனராம். மற்ற இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.