ரேடியோ ஜாக்கியாக மீடியாவுக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் மணிகண்டன். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் மிமிக்ரி கலைஞனாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற கனவோடு போராடினார். அதற்காக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார். சினிமா என்பது எளிதில் கிடைக்காத ஒன்று தானே? இதனால் பல தனியார் நிகழ்ச்சிகளில் கடுமையாக உழைத்தார். பின் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து இருக்கும் சமயத்தில் தான் இவருக்கு சினிமாவில் டப்பிங் தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார் மணிகண்டன்.
இந்த பணி அவருக்கும் சினிமாவுக்கும் இடையேயான தொடர்பை ஏற்படுத்தியது. டப்பிங் செய்யும் திரைப்படங்களின் இயக்குனர்கள், நடிகர்கள் பழக்கம் அதிகம் கிடைத்தது. ஆனாலும் அதை அவர் ஒருபோதும் நடிப்பு ஆசைக்கு பயன்படுத்தியதில்லை. தனிப்பட்ட முறையில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி மணிகண்டன் அலைந்தார். பின் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். 20க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியனார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலமாக இயக்குனர் நலன் குமாரசாமியின் அறிமுகம் மணிகண்டனுக்கு கிடைத்தது.
மணிகண்டன் நடித்த படங்கள்:
அதன் மூலம் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் மணிகண்டன். அதற்குபின் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும், ரஜினியின் காலா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இவருக்கென ஒரு அங்கீகாரத்தை தேடிக்கொண்டார். பின் பல படங்களில் அழுத்தமான ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக மாறினார். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்த ஜெய் பீம் படத்தில் ராஜக்கண்ணாகவே மக்கள் மத்தியில் வாழ்ந்து விட்டார் மணிகண்டன்.
மணிகண்டன் திரை பயணம்:
இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் கவனம் இவர் மீது ஜெய் பீம் படத்தின் மூலம் திரும்பியது. தற்போது பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இப்படி மிமிக்ரி கலைஞர், ரேடியோ ஜாக்கி, எழுத்தாளர், நடிகர், இயக்குனர் பன்முகம் கொண்டவர் மணிகண்டன். இந்நிலையில் மணிகண்டன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியது, என் வாழ்க்கை மாறியதற்கு காரணமான நபரைப் பற்றி சொல்கிறேன். நான் சினிமாவில் நுழைய போராடி கொண்டும் இருக்கும்போது ரொம்ப கஷ்டத்தில் அதாவது டிப்ரஷன் உச்சத்தில் இருந்தேன்.
மணிகண்டன் அளித்த பேட்டி:
அப்ப ஒரு நாள் நான் ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அந்த ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரும் என்னிடம் சகஜமாகப் பேசினார். அப்படியே நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இது உங்கள் ஆட்டோவா? என்று கேட்டேன். ஆமாங்க, ஆனால் இதில் எவ்வளவு ஓட்டினாலும் சம்பளம் வரமாட்டேங்குது. கஷ்டமா இருக்கிறது. அதனால் என்னுடைய பொண்டாட்டி பிள்ளைகளை ஊருக்கு அனுப்பி விட்டேன். எங்களது நிலம் இருக்கு கீரை போட்டு கூட பிழைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். தண்ணி எல்லாம் இருக்கு, ஒரு பம்ப் செட் வாங்கணும்.
மணிகண்டன் வாழ்வை மாற்றிய நபர்:
அதற்காக தான் பணம் இல்லை. அதை வாங்குவதற்காக தான் கஷ்டப்பட்டு இரவும் பகலும் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். அது மட்டும் வாங்கி விட்டால் என்னுடைய வாழ்க்கையே மாறிவிடும். நான் எதிர்காலத்தில் வேற லெவல்ல இருப்பேனே என்று மகிழ்ச்சியாக கூறினார். அப்போது அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் சொன்ன வார்த்தை தான் என்னுடைய வாழ்க்கை ஏமாற்றியது. என்னுடைய வாழ்க்கை இந்தளவுக்கு கொண்டு வந்து சேர்வதற்கும் அவருடைய தன்னம்பிக்கையான வார்த்தை தான். அவரை நான் என்றும் என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன் என்று கூறி இருந்தார்.