‘செய்முறை’ வழக்கத்தை மையாக வைத்து வெளியாகி இருக்கும் ‘மருத’ – முழு விமர்சனம் இதோ.

0
1593
marutha
- Advertisement -

இயக்குனர் ஜி.ஆர்.எஸ். இயக்கி நடித்த மருத படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிக்வே பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சபாபதி தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார், விஜி சந்திரசேகர், சரவணன், லவ்லின், வேல.ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். பட்டுக்கோட்டை பி ரமேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிராமத்து பின்னணியில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

தென்மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கை முறையில் ஒன்றாக இருப்பது செய்முறை. ஒருவரின் குடும்ப விழாக்களில் பங்கேற்கும் அவருடைய உற்றார், உறவினர்கள் தங்களால் இயன்ற பணத்தையோ, பொருளையோ வைத்து விட்டு செல்வார்கள். இந்தப் பணத்தை கொடுத்த நபரின் வீட்டில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடந்தால் அப்போது அந்த மொய் பணத்தை வாங்கியவர் அதே அளவுக்கு அல்லது அதை விட கொஞ்சம் அதிகமாகவும் செய்வது தான் வழக்கம். இது தான் செய்முறை நிகழ்வு. இந்த செய்முறை நிகழ்வினால் பல நல்லவைகளும் உண்டு, கெட்டவைகளும் உண்டு. இதில் சில அடிதடி, கொலை வரைக்கும் சென்றிருக்கிறது.

- Advertisement -

செய்முறை வழக்கம்:

அந்த அளவுக்கு சென்சிடிவான விஷயத்தை கையாண்டு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜிஆர்எஸ். இவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். படத்தில் ராதிகா மகனின் காதுகுத்து விழாவிற்கு ராதிகாவின் அண்ணனான சரவணன் செய்முறை செய்கிறார். அந்த நிகழ்ச்சியில் அப்போது ஏற்படும் பிரச்சனையால் அளவுக்கு அதிகமாக பணத்தையும் நகைகளையும் கொடுத்து விடுகிறார் சரவணன். அதற்கு பிறகு சரவணன் வீட்டில் நடக்கும் விழாவின் போது அதே செய்முறையை ராதிகா குடும்பத்தாரால் செய்ய முடியாமல் போகிறது.

ராதிகா- சரவணன் குடும்பத்தில் பிரச்சனை:

இதனால் சரவணன் மனைவியான விஜி சந்திரசேகர் கோபத்தில் கேவலமாக ராதிகாவின் கணவரை அசிங்கப்படுத்துகிறார். இதனால் அவமானம் தாங்க முடியாமல் மாரிமுத்து தற்கொலை செய்துகொள்கிறார். இந்த சம்பவத்தினால் சரவணன் குடும்பத்திற்கும், ராதிகா குடும்பத்திற்கும் இடையில் பிரச்சனை ஏற்படுகிறது. பின் இரு குடும்பத்திற்கும் பேச்சுவார்த்தையே இல்லாமல் போகிறது. பின் நாளடைவில் சரவணன்- விஜி தம்பதியினருக்கு ஒரு மகளும், ராதிகாவுக்கு ஒரு மகனும் இருக்கிறார்கள். விஜி ஊர் முழுக்க கடன் கொடுத்துவிட்டு கருணையே இல்லாமல் வட்டி வசூலிக்கும் மிகப் பெரிய வசூல்காரியாக இருக்கிறார். ராதிகா புளி உடைத்து பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

விஜி செய்யும் சதி வேலை:

இவருடைய மகன் ஊதாரியாக ஊரை சுற்றி இருக்கிறார். பின் கதாநாயகன், கதாநாயகிக்கு காதல் மறைகிறது. அதேநேரம் இந்த காதலை விஜி எதிர்க்கிறார். மேலும், தனது மகளுக்கு பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்ப்பதற்காக விஜி தீவிரமாக செயல்படுகிறார். இதற்கு முன்பாகவே செய்முறை வைக்க வேண்டிய நிகழ்வு ஒன்று ஏற்படுகிறது. அதற்கு ராதிகாவை வீடு தேடி வந்து மிரட்டி விட்டுப் போகிறார் விஜி. ராதிகாவும் செய்முறையை எப்படியாவது செய்து விட வேண்டும் என்று துடிக்கிறாள். கடைசியில் ராதிகா செய்முறையை செய்தாரா? காதலர்களின் காதல் வெற்றி பெற்றதா? விஜி தன் மகளுக்கு முறைபையனையே கட்டி வைத்தாரா? இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம்:

இயக்குனர் ஜி ஆர் எஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மதுரைக்காரன் என்பதனால் அவருக்கு டயலாக் டெலிவரி எல்லாம் எளிமையாக இருந்தது. ஆனால், ஹீரோ கூடறிய தோற்றம் இருந்தாலும் கவர்ச்சி இல்லை என்பது தான் இவருக்கு மைனஸ்ஆக அமைந்தது. படம் முழுக்க ஊதாரித்தனமாக சுற்றி விட்டு கடைசி கிளைமாக்ஸில் புயலாக மாறி நடித்திருக்கிறார். படத்தில் கதாநாயகியாக வரும் லவ்லின் கிராமத்து முகத்துக்கு ஏற்றார்போல் இருக்கிறார்.மேலும், படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் இவர் பேசும் வசனம் ரசிக்கும்படியாக உள்ளது. வழக்கம்போல் ராதிகா தன்னுடைய எதார்த்தமான, அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ராதிகா கதாபாத்திரம்:

இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு பெரும் முதுகெலும்பு என்று சொல்லலாம். மீண்டும் கிழக்கு சீமையிலே படத்தை ராதிகா நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டார். அதேபோல் அண்ணன் மனைவியாக நடித்திருக்கும் விஜி தன்னுடைய மொத்த நடிப்பையும் படத்தில் இறக்கி வைத்தார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படத்தில் பெண் தாகவே மிரட்டி இருக்கிறார். பருத்திவீரன் சரவணன் கம்பீரமான மீசையுடன், அண்ணனுக்கு உரிய கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜாவின் இசை நம்மை 80, 90 காலகட்டத்திற்கு கொண்டு சென்று விட்டது. அதேசமயம் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

பார்வையாளர் கருத்து:

அரை மணி நேர காட்சிகளை எந்த ஒரு விறுவிறுப்பும் இல்லாமல் நீண்டு கொண்டு சென்றிருப்பது பார்ப்போரை சலிப்படைய செய்திருக்கிறது. வழக்கம்போல அண்ணன் – தங்கை கதையை கொஞ்சம் செய்முறை என்ற கோணத்தில் இயக்கி இருக்கிறார் இயக்குனர். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படத்தில் பெரிதாக கதாபாத்திரங்கள் பேசப்படவில்லை. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த இயக்குனர் ஜி.ஆர்.எஸ். இந்த படைப்பு அவருடைய குருவின் பாணியில் மண்ணின் கதையை பேசியிருப்பது சற்று போர் அடிக்கும் வகையில் தான் உள்ளது. இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக கொண்டு சென்றிருந்தால் கதை மக்கள் மத்தியில் சூடு பிடித்திருக்கும் என்று கூறப்படுகிறது.

நிறைகள்:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

செய்முறை என்ற பழக்கத்தை தெளிவாக படத்தில் காண்பித்திருக்கிறார்கள்.

அண்ணன் – தங்கை பாசம், பழைய முறை வழக்கம் ஆகியவற்றை அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

குறைகள் :

வழக்கம்போல கிழக்குசீமையிலே படத்தை திருப்பி போட்டு இருப்பது போல இருக்கிறது.

இன்னும் நன்றாக நடிகர்களை தேர்வு செய்திருக்கலாம்.

அதேபோல் இயக்குனர் பழைய மாவையே அரைத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக கதையில் மாற்றங்களைக் கொண்டுவந்து இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

அரை மணி நேர படத்தை இரண்டு மணி நேரம் கொண்டு சென்றது பார்ப்போரை கடுப்பேற்றி இருக்கிறது.

மொத்தத்தில் மருத – சிறப்பான விருந்து. ஆனால், சுவை இல்லை

Advertisement