2027 ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு இந்திய அணியின் எதிர்காலம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் அனுபவம் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். 2027 உலகக் கோப்பி தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள வேகப்பந்து மற்றும் பவுன்ஸ் நிறைந்த ஆடுகளங்களில் அனுபவமிக்க வீரர்களின் பங்கு மிக முக்கியமாக இருக்கும் என்று கைஃப் தெரிவித்துள்ளார்.

2027 உலகக் கோப்பையில் கோலி-ரோஹித் தேவை
இதுகுறித்து பேசிய முகமது கைஃப், "2027 உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். தற்போது அனைவரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து பேசுகிறார்கள். அது காரணமில்லாமல் இல்லை. அந்த உலகக் கோப்பை எளிதானதாக இருக்காது. வேகமும் பவுன்ஸும் அதிகம் இருக்கும் ஆடுகளங்களில் இந்திய அணிக்கு கோலி மற்றும் ரோஹித் இருவரும் நிச்சயமாக தேவைப்படுவார்கள். அதனால் அவர்கள் தொடர்ந்து அதிக போட்டிகளில் விளையாடி நல்ல ஃபார்மில் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
மெஸ்ஸியுடன் ஒப்பிட்ட கைஃப்
அதன்பிறகு, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை எடுத்துக்காட்டாக கூறிய கைஃப், அனுபவம் எந்த விளையாட்டிலும் வெற்றிக்கான முக்கிய ஆயுதம் என்றார். "லியோனல் மெஸ்ஸிக்கு தற்போது 39 வயது. இருந்தாலும் அவரது தலைமையில் அர்ஜென்டினா மீண்டும் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் அவர் கோல் அடிக்கவில்லை.

ஆனால் ஒரு அசிஸ்ட் மூலம் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். அதுதான் அனுபவத்தின் மதிப்பு. இளம் வீரர்கள் போட்டியை முடித்துக் கொடுக்கலாம். ஆனால் அனுபவமிக்க வீரர்கள்தான் அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி வெற்றிக்கான வாய்ப்பை உருவாக்குவார்கள்" என்று கைஃப் தெரிவித்தார்.
இந்தியாவின் 'மெஸ்ஸி'கள் கோலி மற்றும் ரோஹித்
அதைத்தொடர்ந்து, "அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸி எவ்வளவு முக்கியமோ, அதேபோல இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முக்கியமானவர்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் இருவரும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2027 உலகக் கோப்பையில் வெற்றி பெற வேண்டுமென்றால், இந்த இரண்டு மூத்த வீரர்களின் அனுபவம் மிகப்பெரிய பலமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

அனுபவமும் இளமையும் சேர்ந்தால்தான் வெற்றி
மேலும், கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டாக இருந்தாலும் அனுபவம் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று என்றும் கைஃப் குறிப்பிட்டார். இளம் வீரர்களின் அதிரடியும், மூத்த வீரர்களின் அனுபவமும் சரியான சமநிலையில் இருந்தால்தான் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் வெற்றி பெற முடியும். அதனால், 2027 உலகக் கோப்பையை மனதில் வைத்து இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்பதே தனது கருத்து என்று கைஃப் தெரிவித்துள்ளார்






