முரளி விஜய்யின் பேச்சு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது
இந்திய கிரிக்கெட்டில் ஒருகாலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் ஆகியோரின் உறவு, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களால் பல ஆண்டுகளாக ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் இந்திய தொடக்க வீரர் முரளி விஜய், தினேஷ் கார்த்திக் குறித்து மனம் திறந்து பேசியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

'தமிழ்நாட்டின் சிறந்த கிரிக்கெட்டர்' என புகழாரம்
தினேஷ் கார்த்திக்கை பற்றி பேசிய முரளி விஜய், "நான் சிறுவயதில் இருந்தே தினேஷ் கார்த்திக்கை அறிவேன். அவர் ஒரு அற்புதமான மனிதர், துடிப்பான ஆளுமை கொண்டவர். தமிழ்நாட்டின் சிறந்த கிரிக்கெட்டர், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர். நான் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்று அவர் பேட்டிங் செய்வதை ரசித்திருக்கிறேன். அவரைப் போன்ற ஒரு கிரிக்கெட்டரை நான் பார்த்ததில்லை. அவர் ஒரு ஃபென்டாஸ்டிக் கிரிக்கெட்டர். என் கிரிக்கெட் வாழ்க்கையில் பல நேரங்களில் எனக்கு உதவியிருக்கிறார். அதற்காக நான் அவருக்கு உண்மையாக நன்றி சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஒருகாலத்தில் கிரிக்கெட்டை விட அதிகம் பேசப்பட்ட சர்ச்சை
முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் நட்பு, இந்திய மற்றும் தமிழ்நாடு அணிகளில் இணைந்து விளையாடிய காலத்திலேயே மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ஆனால், பின்னர் தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவியாக இருந்த நிகிதாவை முரளி விஜய் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு இருவரும் தனித்தனியாக தங்களது வாழ்க்கையில் முன்னேறினாலும், அந்த சம்பவம் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வந்தது. இருவரும் அந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் பெரிதாக கருத்து தெரிவிக்காமல் இருந்தனர்.

பழைய சர்ச்சைகளை தாண்டிய மரியாதை
அந்த தனிப்பட்ட சம்பவத்திற்குப் பிறகும், தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் திறமை குறித்து முரளி விஜய் எந்த தயக்கமும் இல்லாமல் பாராட்டியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு கிரிக்கெட் வீரராக தினேஷ் கார்த்திக்கின் திறமை மற்றும் அவர் அளித்த உதவிகளை மறக்க முடியாது என்பதையே முரளி விஜய் தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
முரளி விஜய்யின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல ஆண்டுகளாக இருவருக்கும் இடையே இருந்ததாகக் கருதப்பட்ட மனக்கசப்புகளுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியா என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இருப்பினும், இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான நிகழ்வுகள் குறித்து அவர்கள் பொதுவெளியில் விரிவாக கருத்து தெரிவிக்காத நிலையில், தற்போது முரளி விஜய் வெளிப்படுத்திய மரியாதையும் நன்றியும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.






