தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பா ரஞ்சித். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் இந்த படத்தில் பணியாற்றி இருக்கின்றார். பல எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் அர்ஜுன் சினிமாவில் எப்படியாவது பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வருகிறார். பின் அவர் அங்கு ஒரு நாடக குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது குழுவில் உள்ள நபர்களுடன் அர்ஜுனுக்கு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இருந்தாலும், அர்ஜுன் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வருகிறார். திடீரென்று ஒரு நாள் நாடக குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடக்கிறது.
இதற்கிடையே ரெனே- இனியன் இருவரும் காதலித்து வருகிறார்கள். திடீரென்று அவர்களுடைய காதல் பிரேக் அப் ஆகிறது. இப்படி பல கிளை கதைகளாக நட்சத்திரம் நகர்கிறது படம் சென்று கொண்டிருக்கின்றது. இறுதியில் அர்ஜுனின் அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா? அர்ஜுனுக்கு என்ன ஆனது? ரெனே-இனியன் காதல் என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்திருக்கிறார். வழக்கம்போல் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவமானம், குடித்துவிட்டு சண்டை போடுவது என்று எதார்த்தமான தன்னுடைய நடிப்பை கலையரசன் வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை அடுத்து காளிதாஸ் ஜெயராமன் இனியனாக நடித்திருக்கிறார். இவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுக்கிறார். ஆனால், அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இவருடைய கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது.
பின் ரெனே ரோலில் துஷாரா விஜயன் நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவிலேயே ஒரு பெண் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஒரு அழுத்தமான கதையை யாரும் தந்து இருக்க மாட்டார்கள். திமிரான பேச்சு, யாருக்கும் அஞ்சாத குணம், தனக்கு தோன்றுவதை பேசி பிடித்ததை செய்வது என்று அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி நாடக குழுவில் உள்ள கதாபாத்திரங்களுக்கு இயக்குனர் ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்திருப்பது படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம்.
மேலும், இதுவரை படங்களில் காண்பிக்காத ஒரு காதல் கதையை இயக்குனர் பா ரஞ்சித் இந்த படத்தில் காண்பித்திருக்கிறார். படத்தில் காதல் பாலின வேதங்கள், ஜாதி மதங்கள், நிறைவேறுபாடுகள் கடந்து இருக்கிறது. ஒரு வித்தியாசமான காதல் கதையை இயக்குனர் தமிழ் சினிமாவிற்கு காண்பித்து இருப்பது பாராட்டியே ஆக வேண்டும். படத்தில் பல கதாபாத்திரங்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. காதலுக்கு ஏற்றவாறு இளையராஜாவின் பாடலும் நம்மை படத்திற்கு உள்ளேயே கொண்டு செல்கின்றது.
ஆனால், படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றது போல் இருக்கிறது. அதோடு படத்தின் நீளமும் பார்வையாளர்களை நெளிய வைத்து இருக்கிறது என்று சொல்லலாம். சில இடங்களில் நிறைய கதாபாத்திரங்கள் காண்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், படத்தில் ஆவண படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் காட்சி அருமையாக வந்திருக்கிறது. இது தவிர படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி பக்காவாக வந்திருக்கிறது என்று சொல்லலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமா விரும்பிகளுக்கு நட்சத்திரம் நகர்கிறது படம் ஒரு நல்ல விருந்து என்றே சொல்லலாம்.
பிளஸ்:
கலையரசன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் நடிப்பு அருமை.
ஒளிப்பதிவும், பின்னணி செய்யும் படத்திற்கு பக்க பலம்.
இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதம் சூப்பர்.
புதுவித திரை அனுபவத்தை கொடுத்திருக்கிறது.
மைனஸ்:
முதல் பாதி மெதுவாக சென்றிருக்கிறது.
படத்தின் நீளம் குறைத்து இருக்கலாம்.
மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லை.
மொத்தத்தில் நட்சத்திரம் நகருகிறது – நீண்ட நாட்கள் ஜொலிக்கிறது.