தேசிய விருது வென்ற ஆட்டம் படத்தின் விமர்சனம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய படங்களுக்கான தேசிய விருது தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வருடம் அதிகமான விருதுகளை காந்தாரா படம் தான் பெற்று இருக்கிறது. தமிழில் பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் படங்களுக்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மலையாளத்தில் வெளியான ஆட்டம் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு திரைப்பட விழாக்களில் வெளியாகி ஓடிடியில் வெளியாகியிருந்த மலையாள படம் தான் ஆட்டம். இந்த படத்தை ஏகர்ஷி இயக்கி இருந்தார்.
ஆட்டம் படம்:
படத்தில் ஒரு நாடகக் குழுவில் 13 பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் தான் பெண். அவருடைய பெயர் அஞ்சலி, மற்ற அனைவருமே ஆண்கள். அஞ்சலிக்கு சிறுவயதிலிருந்தே நண்பனாகவும், காதலாகவும் இருப்பவர் வினை. மேலும், இந்த நாடகத்தில் நடிப்பவர்கள் பலருமே பகுதி நேரமாக பிளம்பர், செஃப், டிராவல்ஸ் என்று ஏதாவது ஒரு வேலை செய்து வருகிறார்கள். இதில் கொஞ்சம் வசதியான நபர் யார் என்றால் ரவி தான். இவர் சினிமாவில் சில படங்களில் நடித்திருக்கிறார்.
கதைக்களம் :
இதனால் இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிறார். இவர் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, தன் நாடகத்தை பிரபலமாக அரங்கேற்ற பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். ஆனால், இது பல வருடங்களாக இந்த நாடகக் குழுவில் இருக்கும் வினய்க்கு பிடிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இவர்களுடைய நாடகத்தை பார்த்த ஒரு வெள்ளைக்கார தம்பதிகள் அவர்களை பாராட்டி ரிசார்ட்டில் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள்.
படத்தின் கதை:
இதில் அஞ்சலி உட்பட 13 பேருமே பார்ட்டியில் கலந்து கொண்டிருந்தார்கள். ஆட்டம், பாட்டம், குடி, சண்டை என்று ரிசார்ட்டில் அனைவரும் கும்மாளமாக இருந்தார்கள். அடுத்த நாள் பார்ட்டி முடிந்து அஞ்சலி யாரிடமும் சொல்லாமலே சென்று விடுகிறார். பின்பு விசாரித்த போது, அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது யாரோ அவரிடம் தவறாக நடந்தது தெரிய வந்திருக்கிறது. இதனை அஞ்சலி வினயிடம் சொல்லி அழுகிறாள். ஆனால், அந்த நபர் யார் என்று அஞ்சலிக்கு தெரியவில்லை.
இதை அடுத்து அஞ்சலியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை தேடுதலில் படத்தின் கதை நகர்கிறது. அந்த குற்றவாளி யார்? அவருக்கு தண்டனை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. படம் முழுக்க வசனங்களால் தான் நிறைந்திருக்கிறது. இந்த படத்தில் சஸ்பெண்ட், திரில்லர் எதுவுமே இல்லாததால் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலுமே, கதையை சுவாரசியமாக கொண்டு செல்ல இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார்.
படத்தின் இறுதி வரை யார் குற்றவாளி என்பதை சொல்லாமலேயே ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மேல் சந்தேகப்படும் அளவிற்கு இயக்குனர் கதையினை கொண்டு சென்றிருக்கிறார். குறிப்பாக, 12 ஆண்களின் மீது சந்தேகப்படும் அளவிற்கு சொல்லி இருக்கும் காரணமும் நம்ப முடியும் அளவிற்கு இருக்கிறது. கிளைமாக்ஸ் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் ஓடிடி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்.
நிறை :
நடிகர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதை உள்ளது.
பின்னணி இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.
குறை:
கதையில் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.
முதல் பாதி கதை பொறுமையாக செல்கிறது.
இன்னும் சில காட்சிகளில் விறுவிறுப்பு இருந்திருக்கலாம்.
பாடல்கள் பெரிதாக கவரவில்லை.
மொத்தத்தில் ஆட்டம்- சூடு பிடித்தது.