பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ராம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

இந்த படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சிறிய இடைவெளிக்கு பின் தற்போது ராம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் பறந்து போ. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், ரேஸ் ஆண்டனி, மிதுல் ராயன், அஞ்சலி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்கள். மேலும், யுவன் சங்கர் ராஜா தான் படம் முழுக்க இசையமைப்பதாக இருந்தது.
பறந்து போ படம்:
அந்த சமயத்தில் யுவன் வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் பின்னணி இசை மட்டும் அமைத்திருந்தார். பாடல்களை சந்தோஷ் தயாநிதி அமைந்திருக்கிறார். அப்பா-மகன் இடையே இருக்கும் பாசம், மிடில் கிளாஸ் வாழ்க்கை என்று அழகாக இயக்குனர் கதையை கொண்டு சென்றிருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை நயன் சொன்னது:
இந்நிலையில் இந்த படம் தொடர்பாக நடிகை நயன்தாரா, இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால் குழந்தைகளை கூட்டிக்கொண்டு மலை ஏறுங்கள் அல்லது அவர்களை ராம் சார் உடைய பறந்து போ படத்திற்கு அழைத்து சென்று பாருங்கள். வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை, எதை இழக்கிறோம் என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது. நான் பார்த்த ரொம்ப இனிமையான படங்களில் இந்த படமும் ஒன்று. ராம் சார் ஒரு சிறந்த இயக்குனர். பட குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=M9Fn8e-ZKhg
கதைக்களம்:
படத்தில் ஹீரோ சிவா அவர்கள் சென்னை சிட்லபாக்கம் ஏரியாவில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி தான் கிரேஸ் ஆண்டனி. இவர்களுக்கு மிதுல் ராயன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இருவருமே காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள். தன்னுடைய மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் சிவா. அதற்காகவே இவர் இஎம்ஐயில் வீடு, பைக் என்று எல்லாமே வாங்கி வைத்திருக்கிறார். அதோடு கடனை கட்ட முடியாமலும் ரொம்ப கஷ்டப்படுகிறார் சிவா. இவருடைய மனைவி கிரேஸ், சேலை வியாபாரம் செய்கிறார்.
இப்படி இருக்கும் போது ஒருநாள் கோயம்புத்தூரில் சேலை வியாபாரம் செய்ய கிரேஸ் ஆண்டனி செல்கிறார். பின் மிர்ச்சி சிவா தான் தன்னுடைய மகனை கவனமாக பார்த்துக் கொள்கிறார். அப்போது மிர்ச்சி சிவாவின் மகன் பைக்கில் ஊர் சுற்ற வேண்டும் என்று ரொம்பவே அடம் பிடிக்கிறார். இதனால் சிவாவுமே தன்னுடைய மகனை அலைத்துக்கொண்டு பைக் டிராவல் செய்கிறார். அப்படி செல்லும்போது சிவா, தன் பள்ளி தோழி அஞ்சலியை சந்திக்கிறார். மகன்- தந்தை இருவருமே பைக் டிராவல் செய்யும்போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களும், இருவருக்கும் இடையேயான புரிதலும் தான் படத்தினுடைய மீதி கதை.






