720க்கு 150 எடுத்தவங்க பணம் இருந்தா மருத்துவம் படிக்கலாம். ஆனா, இவ்ளோ மார்க் எடுத்த என் மகள் – நீட் குழுவிற்கு அனிதாவின் தந்தை அனுப்பிய கடிதம்.

0
1938
Anitha
- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே நீட் தேர்வுக்கு எதிராக பலர் குரல் குடுத்து வருகின்றனர். நீட் தேர்வு என்று சொன்னதும் தமிழக மக்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது மாணவி அனிதாவின் தற்கொலை தான். நீட் தேர்வால் மருத்துவ சீட்டு கிடைக்காமல் அனிதா துவங்கி கடந்த ஆண்டு வரை பல மாணவர்கள் தற்கொலை செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் நீட் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு அனிதாவின் தந்தை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, எனது மகள் அனிதா சிறுவயதிலிருந்து டாக்டருக்கு தான் படிப்பேன் என்று உறுதியுடன் படித்து வந்தார். பத்தாம் வகுப்பு வரை எங்கள் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த அனிதா வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 478/500 மதிப்பெண்கள் பெற்றார். வீட்டில் கழிப்பிட வசதி இல்லாததாலும், வீட்டிலிருந்து படித்தால் வீட்டு வேலைகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுமென்பதாலும் அவரின் மருத்துவ கனவிற்கு தடையேதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எங்கள் விவசாய நிலத்தை அடகு வைத்து, அருகாமை கிராமத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் சலுகைக் கட்டணத்தில் சேர்த்தோம். 

- Advertisement -

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176/1200 பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழகத்தின் தலைசிறந்த முதல் இரண்டு மருத்துவக்கல்லூரிகளில் பயில்வதற்குப் போதுமானது. நானும் என் குடும்பமும் எப்படியும் என் மகள் அனிதா மருத்துவராகி விடுவார் என்று நினைத்த வேளையில்தான், இந்திய ஒன்றிய அரசு “நீட்” தேர்வை தமிழ்நாட்டின் மீது திணித்தது. நீட் ஆதரவாளர்கள் ஒரு கிராமப்புற ஏழை மாணவர் கூட நீட் தேர்வால் பாதிக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் வரை சென்று பொய் கூறினார்கள். 

‘தமிழ்நாடு நீட் விலக்கு மசோதா’விற்கு அனைத்து அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தனர். அட்டர்னி ஜெனரல் அவர்களும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று முழு நம்பிக்கை அளித்திருந்தார். இரண்டில் எது நடந்தாலும் என் மகள் அனிதா மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துவிடும் என்று முழு நம்பிக்கையுடன் இந்திய ஒன்றியத்தின் தலைநகரிலிருந்து வீடு திரும்பினார். அப்படி நடந்திருந்தால் எங்கள் கிராமத்தின் முதல் மருத்துவராகியிருப்பார் அனிதா.

-விளம்பரம்-

மருத்துவராகி விடலாம் என்று பெரும் நம்பிக்கையுடன் காத்திருந்த என் மகளின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்தெறிந்தது இந்திய ஒன்றிய அரசு. உச்சநீதிமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்காமல் சோர்ந்துபோன எனது மகளிடம் டாக்டர் படிப்பு குறித்து மேலும் பேச மனமில்லை. அவரும் டாக்டர் படிப்பு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து பேசினால் குடும்பத்தினர் கவலை அடைவார்கள் என்று அமைதியானார். நாங்களும் புரிந்துகொண்டு, கால்நடை மருத்துவம் படிக்க மகளை தயார்படுத்தினோம். இத்தகைய சூழலில்தான் என் மகள் அனிதா, தனது மருத்துவராகும் கனவு நிறைவேறாத வேதனையில் செப்டம்பர் 1- 2017 அன்று தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

ஒருவேளை என் மகள் ஒரு ஆண்டு முன்கூட்டியே பிறந்திருந்தால் அவர் விரும்பிய டாக்டர் படிக்கும் வாய்ப்பை பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையிலே பெற்றிருந்திருப்பார்.எது எப்படியோ உயிரோடு இருந்திருப்பார்.நீட் ஆதரவாளர்கள் கூறும் முதன்மையான காரணம் “தகுதி”யின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பதுதான்.1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற என் மகளுக்கு மருத்துவம் படிக்க “தகுதி” இல்லையென்று மறுத்து, நீட் தேர்வில் 720க்கு 150 மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்திருந்தாலும், பணமிருந்தால் அவர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறுகிறார்.

அவர்கள் சொல்லும் தகுதி காற்றில் பறக்கிறது.என் மகள் அனிதாவின் போராட்டங்கள் அனைத்தும் அவரைப் போன்ற கிராமப்புற ஏழை மாணவர்களுக்கானது. அதை உச்சநீதிமன்ற வளாகத்திலே ஊடகங்கள் முன்பு தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அவரின் இறப்பிற்கு பிறகும் நீட் தேர்வால் 13 குழந்தைகள் இறந்துள்ளனர்.மாணவர்களின் உயிரைக்குடிக்கும் நீட் தேர்வை இரத்து செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்திற்கேற்ப(கிராமப்புற மாணவர்களின் உள் இட ஒதுக்கீட்டோடு) இட ஒதுக்கீடு வழங்கினால் அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது அரசுப்பள்ளிகளும் மேம்படும் என்று கூறியுள்ளார்.

Advertisement