தி கேரளா ஸ்டோரி படத்தில் சொல்லப்படுவது உண்மை என்று நிரூபிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று முஸ்லிம் யூத் லீக் இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இதற்கு முன் இவர் ஆஸ்மா, தி லாஸ்ட் மாங்க் போன்ற படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தி கேரளா ஸ்டோரி படம் மே ஐந்தாம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படம் இந்தியில் எடுக்கப்பட்டது. பின் இந்த படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பேன் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. அதில் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்களை ஏமாற்றி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
இது போன்ற காட்சி தான் டிரைலரில் காண்பிக்கப்படுகிறது. அதோடு இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த கதை உண்மைக்கு எதிரானது என்றும் மத வெறியை ஏற்படுத்தி மக்களுடைய நல்லிணக்கத்தை உடைக்கும் திட்டத்தோடு எடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை கேரளாவில் வெளியிட எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.
மேலும், இது குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், மதச்சார்பற்ற மண்ணான கேரளத்தை மதத் தீவிரவாதத்தின் மையமாகக் காட்டுவதற்கான சங் பரிவாரின் அஜண்டாவை இந்த சினிமா பரப்புகிறது என்பதை ட்ரெய்லர் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இது கண்டனத்திற்கு உரியது என்று கூறி இருக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கேரளா முஸ்லீம் யூத் லீக் இயக்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது.
அதில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் சொல்லப்பட்டு இருப்பது உண்மை என நிறுபிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என சவால் விடுக்கப்பட்டள்ளது. இதுகுறித்து கேரளா முஸ்லீம் யூத் லீக்கின் பொதுச் செயலாளர் பி.கே. பிரோஸ் கூறியது, 32 ஆயிரம் பெண்களை மதமாற்றம் செய்ததாகக் கூறியுள்ளீர்கள். அதன்படி பார்த்தால் கண்டிப்பாக ஒரு பஞ்சாயத்தில் இருந்து 30 பேராவது இருப்பார்கள். அவர்களில் ஒருவரின் முகவரி கேட்டால் கூட உங்களுக்குத் தெரியாது. ஆதலால் இதை நிரூபிக்க உரிய ஆதாரத்தைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்” என்று கூறி இருக்கிறார்.