ஹேமா கமிட்டி அறிக்கையால் வெடித்திருக்கும் பூகம்பம் குறித்து நடிகை பத்மப்பிரியா தற்போது பேசியுள்ளார்.சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.
பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
பிரபலங்கள் கருத்து:
இது குறித்து கேரளா சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இத்தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை பத்மப்பிரியா இந்த சர்ச்சை குறித்து பேசி உள்ளார். அதில், ஹேமா கமிட்டியின் பரிந்துரைகள் குறித்தும் அதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது என்பது குறித்தும் தெளிவான விளக்கம் கொடுக்கப்படவில்லை. மலையாளத் திரைப்பட சங்கமான அம்மாவின் நிர்வாகிகளாக இருந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது பொறுப்பற்ற செயல் என்று கூறியுள்ளார்.
பத்மப்ரியா பேட்டி:
மேலும் அவர் நடிகர் மம்மூட்டி மற்றும் மோகன்லால் பழைய விவகாரங்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி இருக்கும் விஷயம்தான் வேதனை அளிக்கிறது. இந்தப் பிரச்சினையை குறித்து அவர்கள் கவனம் செலுத்தாமல் இப்படி பொறுப்பில்லாமல் பதிலளித்திருப்பது ஏமாற்றமாக இருக்கிறது. ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எதற்கு ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. அதற்கான பதிலை அரசு வழங்க வேண்டும்.
மலையாளத்தில் அதிகம்:
ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து விடுவதால் மட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. மலையாளத் திரை உலகில் குரூப் அதிகாரம் இருப்பதால்தான் அவர்களால் இது போன்ற செயல்களில் ஈடுபட முடிகிறது. எனக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் குறைவதற்கு அதுவும் ஒரு காரணம். தமிழ் சினிமாவிலும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவை மலையாள சினிமாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இது போன்ற பிரச்சனைகள் மலையாளத்தில் தான் அதிகம்.
மலையாள சினிமாவின் அவலம்:
தொடர்ந்து பேசிய அவர், எனக்கு ஒரு 25 வயது இருக்கும்போது முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் வந்து, உங்களுக்கு தான் வயசாயிடுச்சு இல்ல நீங்க நடிப்பதை நிறுத்தி விடலாமே என்று கூறினார். இதுதான் மலையாள சினிமாக்காரர்களின் பார்வை. இதுபோல் நான் மலையாளத் திரையுலகில் நடித்து வந்த சமயத்தில் எதிர்கொண்டு பிரச்சனைகள் பல உள்ளது என்று பத்மபிரியா கூறியுள்ளார். தற்போது இவரின் பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.