திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ப்ரியாமணி. தெலுங்கு திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘எவரே அதகாடு’. இந்த படத்தினை இயக்குநர் பி. பானு ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக வல்லபா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருந்தார். இது தான் நடிகை ப்ரியாமணி ஹீரோயினாக அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம்.
இதனைத் தொடர்ந்து ப்ரித்விராஜின் ‘சத்யம்’ என்ற மலையாள படத்தில் நடித்தார் ப்ரியாமணி. அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ப்ரியாமணி, அடுத்ததாக தமிழ் திரையுலகிலும் நுழையலாம் என முடிவெடுத்தார். 2004-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘கண்களால் கைது செய்’.
இது தான் நடிகை ப்ரியாமணி தமிழ் சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர்பாரதிராஜா இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக வசீகரன் என்பவர் நடித்திருந்தார். ‘கண்களால் கைது செய்’ படத்துக்கு பிறகு ‘அது ஒரு கனாக்காலம், மது, பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் ப்ரியாமணி.
தெலுங்கு, மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ப்ரியாமணி. ஹிந்தி திரையுலகில் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடித்திருந்தார்.
அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘1 2 3 4 கெட் ஆன் தி டான்ஸ் ஃப்ளோர்’ என்ற பாடலில் ப்ரியாமணி நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, ப்ரியாமணி மீடியாவுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் “பிரபல நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நீங்கள் நடனமாடுவீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ப்ரியாமணி “சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ஹிந்தி படத்தில் ஷாருக்கான் ஹீரோ என்பதால், அவருக்காக அதில் நான் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தேன். இனிமே அப்படி ஏதாவது ஒரு படத்தில் பாடலுக்கு மட்டும் நடனமாட அணுகினார்கள் என்றால், நான் நடிக்க மறுத்து விடுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.