இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தில் முனிஸ்காந்த், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இன்று பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் தாய் கிழவி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ராதிகா அவர்கள் கருமாத்தூர் கிராமத்தில் பவுனுதாயாக வசித்து வருகிறார். இவர் அசைக்க முடியாத அதிகாரம், யாருக்கும் அஞ்சாத சுபாவம், கையில் சுருட்டு, வெறித்தனமாக பேசும் வசனங்கள் என்று ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இவர் வட்டி தொழில் செய்கிறார். தன்னுடைய பிள்ளைகளை
தன் நிழலில் வளர விடாமல் இருக்கும் இரும்பு மனுசி. கொடுத்த கடனை கரராக கேட்க கூடியவர். அவர் எப்போ இறப்பார் என்று ஊர் மக்கள் மட்டும் இல்லாமல் தங்களுடைய பிள்ளைகளுமே நினைக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் அவருடைய சொத்துக்காக அவருடைய பிள்ளைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திடீரென்று ஒரு நாள் பவுனுதாயி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார்.
அவருடைய ஒரு கைவிரல் மட்டும் ஏதோ ஜாடை காட்டுகிறது. அந்த ஜாடையில் ஒளிந்திருக்கும் ரகசியம் யாருக்கும் புரியவில்லை. பின் நகை கடை ஓனர் மூலம் ராதிகா 160 பவுன் நகை வாங்கிய விஷயம் மகன்களுக்கு தெரிய வருகிறது. இதனால் ராதிகா மகன்கள், ராதிகா இறந்தால் அந்த நகை பெண்ணுக்கு போய்விடும் என்று சொல்வதால் அவருடைய இறப்பை தள்ளி வைத்து அந்த நகைகளை எல்லாம் கைப்பற்ற திட்டம் போடுகிறார்கள்.

பின் ராதிகாவின் உயிரையுமே காப்பாற்ற போராடுகிறார்கள். ராதிகாவின் மகன்கள் நினைத்தது போல நடந்ததா? ராதிகா உயிர் பிழைத்தாரா? அவருடைய நகைகளை மகன்கள் கைப்பற்றினார்களா?
என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை. படத்தில் ராதிகா பவுனுதாயி என்ற வயதான கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு பெண் வயதானாலும் தன்னம்பிக்கையோடு தைரியமாக பிறருடைய ஆதரவு இல்லாமல் வாழ வேண்டும் என்ற ஒரு கருத்தை இயக்குனர் இந்த படத்தில் சொல்லி இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
ராதிகா பவுனுத்தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அவருடைய தைரியம், திமிர், தன்னம்பிக்கை எல்லாமே அட்டகாசமாக இருக்கிறது.
இவரை அடுத்து படத்தில் வரும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவு எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால், சில இடங்களில் வசனத்தினுடைய உச்சரிப்பு தான் சரியாக புரியவில்லை.

சில இடங்களில் ராதிகாவினுடைய செயல் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. இருந்தாலும் ராதிகாவின் உடைய நடிப்பு அருமை. சில காட்சிகள் செயற்கை தனமாக இருக்கிறது. முக்கியமான கருத்துக்களை இயக்குனர் அழுத்தமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும். படத்தில் காமெடிகளும் நன்றாக இருக்கிறது. ஆனால், சில இடங்களில் தான் கடுப்பை ஏற்றுகிறது. ஒரு கிராமத்து மூதாட்டியின் வாழ்க்கையை இயக்குனர் சிறப்பாக காண்பிக்க முயற்சித்து இருக்கிறார். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் தாய் கிழவி இருக்கிறது.
நிறை:
ராதிகாவின் நடிப்பு அட்டகாசம்
கதைக்களம் ஓகே
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்
மூதாட்டியின் வாழ்வியலை மையப்படுத்திய கதை
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
வசனங்களின் உச்சரிப்பு தெளிவாக இருந்திருக்கலாம்
மொத்தத்தில் தாய் கிழவி - மூதாட்டியின் போராட்டம்






