தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணாமலை தான் ஆக வேண்டும் என்று ரஜினிகாந்த் சொன்னதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அளித்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. துக்ளக் பத்திரிகையின் 54 வது ஆண்டுவிழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டிருந்தார்.
அப்போது விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருப்பது, அண்ணாமலையை பற்றி இந்த நேரத்தில் நான் சொல்லியே ஆக வேண்டும். அண்ணாமலையின் ஐபிஎஸ் அனுபவம் என்பது சிறப்பு வாய்ந்தது. தமிழக பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக அண்ணாமலை திகழ்கிறார். அரசியல் செய்வது சாதாரணமான விஷயம் கிடையாது. தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் கருவியாக அண்ணாமலை இருப்பார்.
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேட்டி:
திடீரென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. இதை இங்கு சொல்லலாமா? என்று தெரியவில்லை. என்ன சார் சொல்லலாமா? சரி சொல்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பதில் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் அவர் என்னிடம் ஒன்று சொன்னார். நான் ஜெயித்தாலும் முதலமைச்சராக வரமாட்டேன் என்று கூறினார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. நீங்கள் முதல்வர் ஆகாமல் வேறு யாரை ஆக்குவீர்கள் என்று கேட்டேன்.
அண்ணாமலை குறித்து சொன்னது:
அதற்கு அவர், உங்களுக்கு அண்ணாமலை என்று ஒருத்தர் இருக்கிறார் தெரியுமா? கர்நாடகாவில் ஐபிஎஸாக இருக்கிறார். நல்லா பண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் தான் முதலமைச்சராக வர சரியான ஆள் என்று ரஜினி அன்றைக்கு என்னிடம் சொன்னார். அப்போது அண்ணாமலையை பற்றி நான் பேப்பரில் தான் படித்திருக்கிறேன். இந்த விஷயம் இப்போது வரை அண்ணாமலைக்கு தெரியுமா? தெரியாதா? என்று எனக்கு தெரியவில்லை.
நெட்டிசன்கள் கருத்து:
அந்த அளவுக்கு ஐபிஎஸ் ஆக இருக்கும்போது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அண்ணாமலை. ஒரு போலீஸ்காரருக்கும், ஒரு அரசியல்வாதிக்கும், நாட்டுப் பற்று, மக்கள் மீதான அக்கறை, நேர்மை, கடமை, கண்ணியம், வீரம், மன தைரியம் என அனைத்து குணங்களையும் பெற்றவர் தான் அண்ணாமலை என்று புகழ்ந்து பேசி இருக்கிறார். இப்படி இவர் சொல்வதற்கு காரணம், கூடிய விரைவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர்களுடைய வாக்குகள் கிடைப்பதற்காக தான் என்றெல்லாம் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
ரஜினி திரைப்பயணம்:
கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினி. இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இடையில் அரசியலில் குதிப்பதாக சொல்லி இருந்தார். ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர் அரசியல் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். தற்போது ரஜினி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஜெயிலர். இதனை அடுத்து இவர் லால் சலாம், வேட்டையன் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.