தமிழ் சினிமாவில் தற்போதும் மிகவும் பிரபலமான ராப் பாடகராக திகழ்ந்து வருபவர் அறிவு. தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை ரேப் இசை பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். அதிலும் இவர் எழுதிய ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் இந்திய அளவில் பிரபலமடைந்தது. மேலும், இந்த பாடல் இந்திய அளவில் எந்த அளவிற்கு ஹிட் அடைந்தது என்பது நாம் அனைவரும் அறிவோம். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் துவங்கிய விழாவில் அறிவு கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த கவுரவமிக்க போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரை நடத்தப்பட்ட எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையையாகும். 6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.பிரம்மாண்ட செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் எஞ்சாயி எஞ்சாமி பாடலை பாடகி தீ பாடி இருந்தார். ஆனால் , இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்த அறிவு இந்த விழாவில் வரவில்லை.
அவருக்கு பதிலாக கர்ணன் படத்தில் ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலை பாடிய பாடகி கிடாக்குழி மாரியம்மாள் தான் அறிவிற்கு பதில் தீயுடன் சேர்ந்து பாடி இருந்தார். இந்த விழாவில் அறிவு பங்கேற்காததால் அவர் புறக்கணிப்பட்டதாக பலரும் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து பாடகர் அறிவு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
புறக்கணிக்கப்பட்ட அறிவு :
அதில் “ நான் “இசையமைத்தேன்” “எழுதினேன்” , பாடினேன்” & “நடித்தேன்” என்ஜாமியை அனுபவிக்கவும். இதை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ கொடுக்கவில்லை. இப்போது இருக்கும் அனைத்திற்கும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்தேன். இது ஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
அறிவின் ஆதங்க பதிவு :
ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல.என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும். இந்நாட்டில் 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள்.
முடிவில் எப்பொழுதும் உண்மையே வெல்லும் :
இது அனைத்தும் அழகான பாடல்களில் உங்களிடம் பேசும். ஏனென்றால் நாம் இரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை. பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது. ஜெய்பீம். முடிவில் எப்பொழுதும் உண்மையே வெல்லும்” என பதிவிட்டு இருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் பதிவு :
இதையடுத்து இதற்குப் பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “வாங்கோ வாங்கோ ஒண்ணாகி” என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “என்ஜாயி என்ஜாமி” பாடல் உருவான விதம் பற்றி விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘என்ஜாயி என்ஜாமி பாடல் உடனான எனது பயணத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் பண்ண வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலை கம்போஸ், ப்ரோக்ராம் மற்றும் ரெகார்டிங் செய்து, இணைந்து பாடினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.