தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஃப்ரீடம். இந்த படத்தை இயக்குனர் சத்ய சிவா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் உடன் லிஜோமோல் ஜோஸ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியின் இறப்பிற்கு காரணம் விடுதலைப்புலிகள் சிவராஜன் மற்றும் சுபா தான் என்று போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராமேஸ்வரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து சிலரை விசாரணைக்காக வேலூருக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களை இரண்டு வருடமாக அங்கேயே அடைத்து வைத்து காவல்துறை அடித்து ரொம்பவே துன்புறுத்துகிறார்கள்.
விசாரணை என்ற பெயரில் சித்தரவதை செய்கிறார்கள்.
இந்த கொடுமைகள் தாங்க முடியாமல் ரகசியமாக அண்டர் கிரவுண்டில் பள்ளம் தோண்டி 43 பேர் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். தப்பிக்க முயற்சி செய்தவர்களின் நிலை என்ன? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை. படத்தில் கதாநாயகன் சசிகுமார், நாயகி லிஜோமோல் ஜோஸ் உட்பட அனைத்து நடிகர்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சசிகுமார் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

இலங்கை தமிழ் பேச்சு, அகதியாக இருக்கும் நிலை என அனைத்திலுமே சசிகுமார் நடிப்பு மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. வேலூரில் அடைத்து வைத்திருந்த இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகள், கஷ்டம் எல்லாத்தையுமே இந்த படத்தில் காண்பித்திருக்கிறார்கள். வலிகள் நிறைந்த காட்சிகளாக தான் படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இருக்கிறது. டூரிஸ்ட் பேமிலி படம் இலங்கை தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவை பாணியில் கொடுத்திருந்தார் இயக்குனர்.
ப்ரீடம் படத்தில் இயக்குனர் ரத்தமும் சதையும், வலியும் வேதனையுமாக அனுபவித்த கொடுமையை காண்பித்து இருக்கிறார். ராஜீவ் காந்தி கொலையை சுற்றி அகதிகள் முகாமில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சித்திரவதைகளும் கொடுமைகளையுமே காண்பித்து நடத்தி இருந்தார்கள். வரலாற்றை நம் கண்முன்னே இயக்குனர் காண்பிக்க முயற்சித்தது ஒரு மிகப்பெரிய பாராட்டு. படத்தினுடைய ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.

டூரிஸ்ட் பேமிலி படத்தைப் போல இந்த படமும் இருக்கும் என்று பார்த்தால் ஏமாற்றம் தான். அந்த கதை வேறு இது வேறு. உண்மை சம்பவத்தை படமாக இயக்குனர் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்கூறிய விஷயம். நடிகர்கள் ஒவ்வொருவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்கள்.
படத்தில் சின்ன சின்ன குறைபாடுகள் தான். மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவும் இல்லை. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.
நிறை:
சசிகுமார் நடிப்பு
கதைக்களம்
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
படம் முழுக்க எமோஷனல் அழுகை என்றே செல்கிறது
மொத்தத்தில் ஃப்ரீடம் - வலி நிறைந்தது






