இயக்குனர் ஆர்.சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் நந்தன். இந்த படத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை மையமாக மையப்படுத்தியது தான் இந்த படம். படத்தில் பாலாஜி சக்திவேல் என்பவர் ஆதிக்க வர்க்க குடும்பத்தில் இருந்து அதிகாரம் செய்கிறார். இவர் பல வருடமாக ஊராட்சி மன்ற தலைவராகவும் இருக்கிறார். அந்த ஊரிலேயே இவர் மிகுந்த செல்வ வளத்துடன் இருக்கிறார். இதனால் இவரை எதிர்த்து யாரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை.
தொடர்ந்து இவரே பதவியில் நீடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பாலாஜி சக்திவேல் இருக்கும் தொகுதியில் திடீரென்று தாழ்த்தப்பட்டவர் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்கள். இதை அறிந்த பாலாஜி சக்திவேல் கொதித்துப் போய் சண்டை போடுகிறார். பின் தனக்கு விசுவாசியாகவும், தான் சொல்வதைக் கேட்டு அடங்கி நடக்கும் ஒரு ஆளை தலைவராக்கி தன்னுடைய அடிமையாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று திட்டம் போடுகிறார்.
அப்படிப்பட்ட நபராக தான் இவர் சசிகுமாரை தேர்ந்தெடுக்கிறார். பாலாஜி சக்திவேலின் வீட்டில் சசிகுமார் வேலை செய்கிறார். பின் போட்டி இல்லாமலேயே சசிகுமார் தலைவராக ஆகிறார். தலைவராகிய பிறகு சசிகுமார் என்ன செய்தார்? பாலாஜி சக்திவேலின் எண்ணத்தை முறியடித்தாரா? அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தையும் என்ன செய்தார்? தாழ்த்தப்பட்டவர்களுடைய உரிமையை மீட்டெடுத்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.
காலம் காலமாக நம்முடைய நாட்டில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து தான் இயக்குனர் இந்த படத்தை எடுத்திருக்கிறார். சிறப்பாக தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சசிகுமார் பொருந்தி போயிருக்கிறார். குறிப்பாக தாழ்த்தப்பட்டவராகவும், தலைவரான பிறகு அவர் வரும் வேடத்திலும் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். சொல்லப்போனால், தன்னுடைய நடிப்பின் மூலம் சசிகுமார் மிரட்டி இருக்கிறார்.
இவரை அடுத்து வில்லனாக வரும் பாலாஜி சக்திவேல் உடைய பேச்சும், உடல் மொழியும் சிறப்பாக இருக்கிறது. சசிகுமாரின் மனைவியாக ஸ்ருதி நடித்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் வரும் கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பல இடங்களில் வரும் அரசியல் வசனங்கள் நன்றாக இருக்கிறது. ஆனால், அதை சில இடங்களில் உணர்வுபூர்வமாக சொல்ல இயக்குனர் தவறி இருக்கிறார்.
சில முக்கியமான காட்சிகளையும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருந்தால் தொய்வில்லாமல் இருந்திருக்கும். ஜிப்ரான் உடைய பின்னணி இசை ஓகே, ஒளிப்பதிவு சுமார் தான். இந்த படம் உருவாக சில வருடங்கள் எடுக்கப்பட்டதால் நிறைய குறைகள் வந்திருக்கிறது என்று சொல்லலாம். இருந்தாலுமே அதை இயக்குனர் சரி செய்து சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காண்பித்திருக்கிறார். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.
நிறை:
சசிகுமார், பாலாஜி சக்திவேல் நடிப்பு அருமை
கதைக்களம் நன்றாக இருக்கிறது
பின்னணி இசை ஓகே
சமூக விழிப்புணர்வு கதை
குறை:
கதைகளத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்
ஒளிப்பதிவு சுமார்
பாடல்கள் பெரிதாக கவரவில்லை
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
மொத்தத்தில் நந்தன்- ஒருமுறை பார்க்கலாம்