இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சட்டம் என் கையில். இந்த படத்தை சண்முகம் கிரியேஷன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் சதீஷ், அஜய்ராஜ், பாவல் நவகீதன், ரித்திகா, கேபிஒய் சதீஷ், வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, மைம் கோபி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ சதிஷ் ஏற்காடு சாலையில் இரவு நேரத்தில் ஒரு பதட்டத்துடனே காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். அப்போது திடீரென்று குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால் அதன் மீது சதீஸ் மோதி விடுகிறார். விபத்தில் அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் உயிரிழந்து விடுகிறார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் சதீஸ் அந்த உடலை தன்னுடைய கார் டிக்கிலேயே வைத்துக் கொண்டு தன்னுடைய பயணத்தை மீண்டும் தொடர்கிறார்.
அப்போது சோதனை சாவடியில் சதீஷ் சிக்கிக் கொள்கிறார். அங்கிருக்கும் போலீஸ் இடமிருந்து அவர் தப்பிக்க சில வேலைகள் செய்கிறார். இருந்துமே, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு பெண்ணை கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் அஜய் ராஜ். அதேபோல் காணாமல் போன ஒருவரை பற்றி வழக்கு வருகிறது.
இப்படி ஒரு விபத்து, கொலை, காணாமல் போன நபர் என மூன்று பிரச்சனையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து கிரைம்சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் சொல்லப்படுவது தான் படத்தின் மீதி கதை. படத்தில் சதீஷ் ஒரு அப்பாவியான தோற்றதிலும், உணர்ச்சிவசப்படும் போது திக்குவது போல எதார்த்த கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.
படத்தில் அவர் மீது வரும் சஸ்பென்ஸ் கடைசி வரை நீடிக்கிறது. பின் இயக்குனர் கிளைமாக்ஸ் சொல்லும்போது பலருக்குமே அதிர்ச்சி தான். இவரைத் தொடர்ந்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரித்திகா சில காட்சிகளில் வந்தாலும் தன் வேலையை திறம் பட செய்து இருக்கிறார். ஒரு இரவில் நடக்கும் கதையை வைத்து இயக்குனர் வித்தியாசமான கோணத்தில் பரபரப்பையும் விறுவிறுப்பையும் காண்பிக்க முயற்சித்து இருக்கிறார்.
பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை என்ன சஸ்பென்ஸ் என்று எதிர்பார்ப்பிலேயே இயக்குனர் படத்தை கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், சில இடங்களில் அதை சொல்லும் விதத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். சில தடுமாற்றங்கள் வந்தாலும் இயக்குனர் மறக்க செய்து இருக்கிறார். மொத்தத்தில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டம் என் கையில் படம் சதீஷ்க்கு ஒரு கம்பேக்காக இருக்கும்.
நிறை:
சதீஷனுடைய நடப்பு சிறப்பு
கதைக்களம் அருமை
கதைக்களத்தை இயக்குனர் சிறப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.
ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ்
பின்னணி இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது
சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
மொத்தத்தில் சட்டம் என் கையில்- சினிமா விரும்பிகளுக்கு சர்ப்ரைஸ்