சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது போலீஸார் அந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றார்கள். வீட்டுக்குள் ஆண், பெண் என 2 சடலங்கள் அழுகிய நிலையில் இருந்தது. இந்த 2 சடலங்களையும் போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விசாரணையில் இறந்தவர் சின்னத்திரை தொடரில் நடித்த ஸ்ரீதர் என்றும் ஸ்ரீதரின் தங்கை ஜெயகல்யாணி என்றும் தெரியவந்தது.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறியது, விசாரணையில் இறந்தது சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர், நடிகை ஜெயகல்யாணி எனத் தெரியவந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது ஸ்ரீதரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. ஆனால், ஜெயகல்யாணி சமீபத்தில் தான் இறந்து உள்ளார். ஆகவே ஸ்ரீதர் இறந்த பிறகு தான் அவரின் தங்கை ஜெயகல்யாணி இறந்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
மேலும், விசாரணையில் ஸ்ரீதர், ஜெய கல்யாணி ஆகிய இருவருக்கும் திருமணமாகவில்லை என்று தெரியவந்து உள்ளது. ஸ்ரீதரும் ஜெயகல்யாணியும் சின்னத்திரை மற்றும் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். சினிமா வாய்ப்புகள் இல்லாமல் வருமானமின்றி இவர்கள் சிரமப்பட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற காரணம் தெரியவில்லை. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வருமானமின்றி தவித்து வந்ததால் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு சமீப காலமாகவே இவர்கள் இருவரும் கடும் மனவருத்தத்திலும் மன அழுத்தத்திலும் இருந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.