பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ வெற்றி பெற்றதா? இல்லையா? – முழு விமர்சனம் இதோ

0
261
- Advertisement -

ராணுவத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். இப்படத்தில் முகுந்தாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்கிற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் வீட்டில் சந்தித்த எதிர்ப்புகள் என்ன?. இதற்கு இடையே, மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி?. ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன?. காஷ்மீரில் ஏன் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் தான் அமரன் படத்தில் கதை.

- Advertisement -

படத்தில் நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என்று ராணுவ வீரர் முகுந்தின் ஒட்டுமொத்த உருவமாக, இதுவரை நாம் பார்க்காத சிவகார்த்திகேயனை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி காட்டியிருக்கிறார். அதேபோல், தனது நடிப்பில் முழுக்க முழுக்க வேறு ஒரு களத்தில் இறங்கி, ஒரு ராணுவ வீரராக படத்தில் சிவகார்த்திகேயன் வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயனின் ராணுவ வீரர் கெட்டப் ஒரு பக்கம் கவர, மற்றொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

அதேபோல், நடிகை சாய் பல்லவியும், இந்துவின் கதாபாத்திரத்தில் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். மேஜர் முகுந்த் மீது இந்து வைத்திருந்த அளவற்ற காதல், ஆத்மார்த்தமான அன்பு என்று அவர் நடிப்பில் கொண்டு வந்திருக்கும் விதம், சினிமாவில் மீது சாய்பல்லவிக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தி இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி முகுந்தின் வாழ்க்கையை எவ்வளவு உண்மையாக காட்சிப்படுத்த முடியுமோ, அவ்வளவு உண்மையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் முகுந்த் ராணுவத்திலிருந்து போது அவர் பணியாற்றிய இடங்களுக்குச் சென்று நேரடியாக காட்சிகளை படமாக்கி உள்ளார்கள். இராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் அவர்கள் சந்திக்கும் ஆபத்துகள் போன்றவற்றை இயக்குனர் படத்தில் அருமையாக பதிவு செய்துள்ளார். அந்த காட்சிகளை பார்க்கும் போது நாமே அங்கு இருப்பது போன்ற உணர்வையும் பதபதப்பையும் கொடுக்கிறது. வாழ்க்கை வரலாறு என்பதற்காக படத்தை இழுக்காமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்திருக்கிறது.

நிறை:

இயக்குனர் படத்தைக் கொண்டு சென்ற விதம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பு

ஜிவி பிரகாஷின் இசை

கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்த விதம்

குறை:

படத்தில் பெரிதாக குறை எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் ‘அமரன்’ ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு

Advertisement