“கவுண்டரே! சிவாஜிகணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேண்டா” – சிவகுமாரிடம் மனமுடைந்து பேசியுள்ள சிவாஜி.

0
1926
Sivaji
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் சிவகுமார். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். சிவகுமார் அவர்கள் மிகச் சிறந்த ஓவியர் என்பதுபலர் அறியாத ஒன்று. சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் பல்வேறு சிரியல்களில் நடித்துள்ளார். அதே போல சிவகுமார் ஆரம்பகாலத்தில் எம் ஜி ஆர், சிவாஜி என்று பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இதில் சிவாஜிக்கு இவர் மிகவும் செல்லம். இப்படி ஒரு நிலையில் இவர் சிவாஜி குறித்து பகிர்ந்த சுவாரசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசிய சிவகுமார் ‘“உறுதிமொழி” படப்பிடிப்பு. நானும் பிரபுவும் தேக்கடியில் நடித்துக் கொண்டிருந்தோம். அங்கே ஒரு நாள் சிவாஜி குடும்பத்துடன் வந்திருந்தார். எங்கள் வீட்டிலிருந்து என் மனைவி, குழந்தைகள் எல்லாம் வந்திருந்தனர். சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்படியே என் தோள் மீது கைபோட்டபடி தனியே நடந்த சிவாஜி, “கவுண்டரே! சிவாஜிகணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேண்டா” என்று குரல் தழுதழுக்கச் சொன்னார். “அண்ணே, என்ன பேச்சு பேசுறீங்க! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுலதான் நாங்க விளையாடுகிறோம். எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிச்சிட முடியாது” என்றேன்.”அப்படியா நினைக்கிறே?””இது என் தாய் மேல் சத்தியம்! தொழில் மேல் சத்தியம்” என்றேன்.

- Advertisement -

“எல்லாரும் அப்படி நினைப்பாங்களா?” சிவாஜியின் கேள்வி என்னைக் கலங்கச் செய்து விட்டது. தேக்கடியில் ஓட்டல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள், என் மகள் பிருந்தா. அப்போது அங்கே சிவாஜி வந்தார். “குட் மார்னிங் அங்கிள்” என்று சொன்னாள். “நான் உனக்கு அங்கிள் இல்லம்மா. உங்கப்பன் என் தம்பி! நான் உன் பெரியப்பன்” என்றார். அது முதல் சிவாஜியை பிருந்தா, “பெரியப்பா” என்றுதான் அன்போடு அழைப்பாள். சில ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் சிவாஜி மயங்கி விழுந்து விட்டார். “ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் ஊசலாடுகிறது” என்றும், ஒரு கட்டத்தில் “சிவாஜி இறந்து விட்டார். உடல் விமானத்தில் வருகிறது” என்றெல்லாம் செய்திகள்.

எனக்கு இதயமே ஒரு நொடி நின்று விட்டதுபோல் ஆகிவிட்டது. “பெரியப்பா சாகமாட்டாருப்பா! அவர் கம்பீரமாகத் திரும்பி வருவார் பாருங்க” என்றாள், பிருந்தா. “மகளே, உன் வாய் முகூர்த்தம் பலிச்சுட்டா, ஒரு பூச்செண்டு தர்றேன், அதை உன் கையாலேயே பெரியப்பாவுக்குக் கொடுத்துடு” என்றேன். அதேபோல் புது ரத்தம், புதுப்பொலிவுடன் ஒரு மாத ஓய்வுக்குப் பின் திரும்பி வந்தார். குடும்பத்துடன் போய்ப் பார்த்தேன். அவர் அருகில் ஒரு நாற்காலி – உட்காரச் சொன்னார். நான் தரையில் அமர்ந்தேன். என் தலையைத் தடவிவிட்டபடி சிவாஜி சொன்னார்: “நாமெல்லாம் முன்னொருகால நடிகர்கள்’டா சிவா! எல்லாம் முடிஞ்சுப் போச்சு. நம்மை யாரு ஞாபகம் வச்சிருக்கா?

-விளம்பரம்-

சிங்கப்பூர்ல பாரு, அஞ்சாயிரம் பேர் கூடியிருக்காங்க. இருபது அடிக்கு முப்பது அடி திரையில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ காட்சியைப் போடுறான். அஞ்சாயிரம் பேரும் அடிக்கிறான் விசில். “தங்கப்பதுமை’ யில …ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே’ பாடல் போட்டா…, அவனவன் சாமி ஆடறான். `தங்கப்பதக்கம்’ அரங்கமே குலுங்குது! “சிவா! வாட் ஏ பைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் ஏன்டா அப்ப சாகல? எதுக்காகடா உயிரோட வந்தேன்?” இப்படி சொல்லும்போது சிவாஜிக்கும் எனக்கும் கண்களில் நீர் முட்டித் தளும்பியது. நூறு வயது வாழணும்னு ஆசை இருந்தா கூட, ஒரு கலைஞனுக்கு எப்படி முடிவு வரவேண்டும் என்று அவர் கற்பனை செய்து வைத்திருந்தார். 1981-ல் முத்துராமன் ஊட்டியில் இறந்தபோது, அவரது உடலை நானும் திருப்பூர் மணி படக்குழுவும் சென்னைக்கு எடுத்து வந்தோம்.

அதிகாலை 4 மணி. முத்துராமன் வீட்டு வாசலில் சிவாஜியும் முன்னாள் டி.ஜி.பி. பரமகுருவும் காத்திருந்தார்கள். “கவுண்டரே, தேவனுக்கு (முத்துராமன்) நல்ல சாவுடா! கொஞ்ச நாளா படமில்லாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். ஷூட்டிங் போன இடத்துல உடற்பயிற்சிக்காக ஓடிக்கிட்டிருக்கும்போது உயிர் போறது வீர மரணம். உனக்குத் தெரியுமா? நம்ம நடிக ஜாதியில ஒருத்தர், விஸ்வநாததாஸ் – மேடையில முருகன் வேஷம் கட்டி மயில்மேல் வள்ளி தெய்வானைக்கு நடுவுல உட்கார்ந்திருக்கும்போது செத்துப் போயிட்டார். எவ்வளவு கொடுத்து வைத்த சாவு. சாவுன்னா, அப்படி வரணும்” என்றார். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை ! மனிதர்கள் பிறக்கலாம், இறக்கலாம். ஆனால், தமிழ் உள்ளளவும் தமிழ் சினிமா உள்ளளவும் அந்த ஒரு உலக மகா கலைஞனின் சாதனையை யாரும் மறந்திட முடியாது என்று கனத்த இதயத்துடன் கூறியுள்ளார்.

Advertisement