கொரோனா பேரிடர் காலகட்டத்தில் தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த நடிகர் சோனு சூட் தனது சொத்துக்களை அடமானம் வைத்து உதவி செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த எட்டு, ஒன்பது மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டேஇருந்தது. இந்தியாவை பொறுத்த வரை ஆரம்பத்தில் இருந்த கொரோனாவின் தாக்கம் தற்போது தலை விரித்து ஆடுகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதக்கப்பட்டும் இருக்கிறது. இதனால் பல்வேறு நபர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள். அதிலும் நடிகர் சோனு சோத் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார். மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். சமீபத்தில் கூட விவசாயி ஒருவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார்.
இதேபோல கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.இதுபோல பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வரும் சோனுவுக்குப் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட சோனு சூட்டிற்கு சிலை கூட வைத்து தங்களது நன்றிகளை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நடிகர் சோனு சூட், மக்களுக்கு உதவி செய்தவர்காக தனது சொத்துக்களை அடமானம் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆம், மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் இருந்த இரண்டு கடைகள் மற்றும் ஆறு குடியிருப்புகள் என மொத்தம் எட்டு சொத்துக்களை நடிகர் சோனு சூட் பத்து கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதேபோல கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மும்பையில் உள்ள சர்வதேச வங்கி ஒன்றில் பத்து கோடிக்கு லோன் வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நவம்பர் 24ஆம் தேதி பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.