வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு மாறுவது வீரர்களுக்கு எளிதான விஷயம் அல்ல. பேட்டிங் அணுகுமுறை, ஆட்டத்தின் வேகம், மனநிலை என அனைத்தையும் மாற்ற வேண்டியிருக்கும். இந்த மாற்றத்தின் சவால்கள் குறித்தும், டெஸ்ட் கிரிக்கெட்டின் தனிச்சிறப்பு குறித்தும் இந்திய வீரர் இஷான் கிஷன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
“டெஸ்ட் போட்டியின் சவால் வேற லெவல்”
பிளாட் பிட்ச்களில் பேட்டிங் செய்வது எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கலாம் என்று கூறிய இஷான் கிஷன், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைக்கும் போட்டி மற்றும் சவால் முற்றிலும் வேறுபட்டது என தெரிவித்துள்ளார். வெள்ளைப் பந்து, சிவப்பு பந்து என தொடர்ந்து வடிவத்தை மாற்றி விளையாடுவது வீரர்களுக்கு சவாலானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வடிவத்திற்கும் ஏற்றவாறு ஆட்ட அணுகுமுறையை மாற்ற வேண்டியிருப்பதே கிரிக்கெட்டின் சுவாரஸ்யமான பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“வீரர்களின் வாழ்க்கை வெளியில் பார்ப்பது போல் எளிதல்ல”
களத்தில் வீரர்கள் விளையாடி முடித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள் என்று வெளியிலிருந்து பார்க்கலாம். ஆனால் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை அப்படி எளிதானது அல்ல என இஷான் கிஷன் கூறியுள்ளார். வீரர்களின் மனதில் எப்போதும் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கும் என்றும், போட்டிக்கு வெளியேயும் அவர்கள் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெரிய அளவில் சாதிக்க விரும்பும் வீரர்கள் தங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப் பற்றி தொடர்ந்து குறை கூறாமல், தங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் அவரது கருத்தாக உள்ளது.
“நான் அந்த பந்தை ஆடக்கூடாது”
தனது ஆட்டமிழப்பு குறித்தும் இஷான் கிஷன் வெளிப்படையாகப் பேசியுள்ளார். டெஸ்ட் அல்லது முதல்தர போட்டி என்பதை நினைவில் வைத்து சில பந்துகளை விட்டுவிட வேண்டும் என்பதை தான் அறிந்திருந்ததாகவும், ஆனால் ஷாட்டுக்கு நடுவில் சென்றபோதுதான் தான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று தோன்றியதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக சிவப்பு பந்தில் போதுமான பயிற்சி இல்லாதபோது இதுபோன்ற தவறுகள் நடக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“செய்யக் கூடாது என்று நினைத்ததையே செய்துவிட்டேன்”
மனதில் ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தால், சில நேரங்களில் அதையே செய்து விடுகிறோம் என்று இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் பந்தை ஆடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தபோதும், இறுதியில் அதே பந்தை ஆடிவிட்டதாக அவர் கூறியுள்ளார். எதிர்மறையான எண்ணங்களிலேயே கவனம் செலுத்தியதால் இந்த தவறு நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அடுத்த போட்டியில் ஒவ்வொரு விக்கெட்டுக்காகவும் போராட வேண்டும்”
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாங்கள் விளையாடிய போட்டியில் அணியின் ஆட்டத்திற்கான உற்சாகம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் இஷான் கிஷன் ஒப்புக்கொண்டுள்ளார்.அது சில போட்டிகளில் நடக்கக்கூடிய விஷயம்தான் என்றாலும், அடுத்த போட்டியில் வீரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு விக்கெட்டுக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அணியாக ஆலோசனை நடத்தி அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என்றும் இஷான் கிஷன் கூறியுள்ளார்.

சிவப்பு பந்துக்கு திரும்பும் வீரர்களுக்கு சவால்
இஷான் கிஷனின் கருத்துகள், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு மாறும்போது வீரர்கள் எதிர்கொள்ளும் மனநிலை மற்றும் தொழில்நுட்ப சவால்களை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் பொறுமை, பந்தை தேர்வு செய்வது மற்றும் நீண்ட நேரம் கவனத்தைத் தக்கவைத்துக்கொள்வது முக்கியமானதாகிறது. தனது தவறை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ள இஷான் கிஷன், அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனநிலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.






