விருமன் பட பாடும் வாய்ப்பை இழந்தது குறித்து ராஜலட்சுமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். முத்தையா இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும்.
அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள்.
விருமன் படம்:
தற்போது விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார் அதிதி. அதோடு இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்தது.
இசை வெளியீட்டு விழா :
இதில் கார்த்திக், அதிதி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தனர். விருமன் படத்தில் மதுரவீரன் என்ற பாடலை அதிதி பாடி இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இந்த பாடலை பாட முதலில் ராஜலட்சுமிக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதோடு இவர் அந்த பாடலை பாடி முடித்ததாகவும் , அதன்பின்னர் அவரை நீக்கி அதிதியை பாட வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ராஜலட்சுமி அவர்கள் கூறியிருப்பது, மதுரவீரன் பாட்டை நான் பாடினது உண்மை தான்.
ராஜலட்சுமி அளித்த பேட்டி:
ஒரு மாதத்திற்கு முன்பே யுவன் சார் அலுவலகத்தில் இருந்து கால் வந்தது. யுவன் சார் இசையில் பாடுவது என்பது ஒரு மிகப்பெரிய வரம். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. நான் போய் பாடி கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால், நான் பாடின பாட்டு இப்ப அதிதி குரலில் வெளியாகி இருக்கு. எல்லா இசையமைப்பாளர்களும் பாட்டை ரெக்கார்டிங் பண்ணும் போது நிறைய பாடகர்களை பாடவைத்து பார்ப்பார்கள். இது இயல்பாகவே நடக்கும் விஷயம். பாட்டை பாடின எல்லா குரலுமே வெளியே வரனும் என்ற அவசியம் இல்லை.
பாட்டு ரிஜெக்ட் ஆக காரணம்:
அந்த கதைக்கு அந்தப் பாடலுக்கு யாருடைய குரல் பொருத்தமாக இருக்குமோ அவர்களை தான் தேர்வு செய்வார்கள். இப்படி ரொம்ப யதார்த்தமாக நடக்கிற விஷயத்தை பெரிது பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் கதைக்கும் பாட்டுக்கும் என் குரல் செட் ஆகுமா? இல்லையா? என்று இசையமைப்பாளர் தான் முடிவு பண்ணனும். அதற்கு பிறகு தான் என்னுடைய குரல் வெளியில் வரும். மதுரைவீரன் பாட்டு நல்லா இருந்து இருக்கலாம். ஆனால், என்னுடைய குரல் செட் ஆகாமல் போயிருக்கலாம். இந்த மாதிரி ஏதாவது ஒரு காரணத்தினால் தான் என் பாட்டு ரிஜெக்ட் ஆகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அதிதி குறித்து ராஜலக்ஷ்மி சொன்னது:
அதிதி மதுரவீரன் பாட்டு ரொம்ப சூப்பராக பாடி இருக்கிறார். ரெக்கார்டிங்கில் ஒரு பாட்டு பாடுவது கூட நாம கட் பண்ணி கட் பண்ணி எடுத்திடலாம். ஆனால், ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிதி பாடினது ரொம்ப நல்லா இருந்தது. சரியானவர்களுக்கு தான் சரியான வாய்ப்பை யுவன் சார் கொடுத்திருக்கிறார். எனக்கு இது ஒரு அனுபவம். என் குரல் இப்படித்தான் இருக்கும் என்று யுவன் சார்கிட்ட பதிவு பண்ணிட்டேன். அதுவே பெரிய விஷயம், அதுவே எனக்கு போதும் என்று ராஜலட்சுமி பகிர்ந்திருக்கிறார்.