பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானதில் இருந்து ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்களும் அவர் எந்த மதத்தை சார்ந்தவர் போன்ற விவாதங்களும் சமூக வலைதளத்தில் அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் ராஜராஜ சோழன் பெருமைப்படுத்தி பேசி இருந்தார். அதில் ‘நாம் எகிப்தில் உள்ள பிரமிடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி இருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால், அதேபோல் நாம் இந்தியாவில் நிறைய கோயில்கள் இருக்கின்றன. அதிலும் உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் தஞ்சை பெரிய கோவில் தான். சோழர்கள் காலத்தில் அந்த கோவில் கட்டப்பட்டது.
ராஜராஜ சோழன் தான் அந்த கோவிலை கட்டினார். அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டுமே 80 டன் எடை கொண்டது. நமக்கும் பிரமிடுகள் பற்றியும், சைவ கோபுரம் பற்றியும் தான் தெரியுமே தவிர நம்முடைய புகழ் வாய்ந்த தஞ்சை கோவிலை பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால், கோயில் முன்பு என்று செல்ஃபி போட்டோ எல்லாம் எடுக்கிறோம். பழங்கால கோவிலில் இன்றும் தரமான திடமான பழங்கால கோவில்கள் நம் நாட்டில் இருக்கிறது என்றும் பேசி இருந்தார்.
விக்ரமின் எந்த பேச்சை தொடர்ந்து ராஜராஜ சோழன் பற்றிய பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது அதிலும் குறிப்பாக ரஞ்சித் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 5-ல் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஞ்சித் ‘பா.ரஞ்சித் பேசுகையில், மாமன்னன் ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள்.
ஆனால் அவரது ஆட்சி காலம் இருண்ட காலம். இங்கு நிறைய பேர் ராஜ ராஜ சோழன் எங்கள் ஜாதி என்று சொல்கிறார்கள். பறையர் அமைப்புகள் உட்பட மொத்தம் எட்டு பேர் ராஜ ராஜ சோழன் எங்கள் ஜாதி என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.ராஜ ராஜ சோழன் என் ஜாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. தஞ்சை டெல்டா பகுதியில் மிகப்பெரிய சூழ்ச்சியில் என்னுடைய நிலம் பறிக்கப்பட்டது அவனுடைய ஆட்சி காலத்தில் தான்.சாதி ரீதியான ஒடுக்கு ஒரு முறை ஆரம்பிக்கப்பட்டது அவருடைய ஆட்சிக்காலத்தில் தான் என்று பேசி இருந்தார்.
அது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு ரஞ்சித் மீது பலர் புகார்களும் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்பது போல வெற்றிமாறன் பேசி இருக்கும் வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய வெற்றிமாறன் ‘சினிமா என்பது வெகுமக்களை மிக எளிய மக்களை சென்றடைய கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிகவும் முக்கியம். திராவிடம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிறைய பேசினார்கள்.
ஆனால், மக்களில் இருந்து விலகி எந்த கலையும் முழுமை அடையாது. மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். ஒருவேளை நாம் இன்று அதை தவறினால் ரொம்ப சீக்கிரமாக நிறைய அடையாளங்களை இழந்து விடுவோம். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும் ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும்.
சினிமாவிடம் இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். வெற்றிமாறனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் தற்போது விவாதம் ஆகியிருக்கிறது ஏற்கனவே ராஜ ராஜ சோழன் எந்த சாதியை சேர்ந்தவன் என்று ரஞ்சித் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெற்றிமாறனின் இந்த கருத்தை தொடர்ந்து ராஜராஜ சோழன் இந்து கிடையாதா என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்