மழை பிடிக்காத மனிதன் படம் தொடர்பாக இயக்குனர் விஜய் மில்டன் கூறியிருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் விஜய் மில்டன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர் தமிழில் பிரியமுடன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். பின் இவர் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் காதலில் விழுந்தேன், வழக்கு எண், கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள போன்ற பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை பிடித்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இவருடைய இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் மழை பிடிக்காத மனிதன்.
மழை பிடிக்காத மனிதன்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் விஜய் ஆண்டனி தான் இந்த படத்தின் ஹீரோ. இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பெரும்பாலும் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தை தான் பார்வையாளர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

விஜய் மில்டன் வீடியோ:
இந்நிலையில் இயக்குனர் விஜய் மில்டன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. அதில் அவர், மழை பிடிக்காத மனிதன் படத்தில் ஹீரோ யார்? எங்கிருந்து வந்தார்? அவர் என்ன செய்கிறார்? அவருக்கும் சரத்குமாருக்கும் என்ன தொடர்பு? அவரை ஏன் அமைச்சர் கும்பல் தேடிக் கொண்டிருக்கிறது? ஹீரோ டாக்டரா? ரவுடியா? போன்ற பல கேள்விகளுடன் தான் கதையை ஆரம்பித்திருக்கிறேன். கடைசியில் தான் அதற்கான பதிலையும் சொல்லி இருக்கிறேன்.
#Watch | விஜய் ஆண்டனியை வைத்து தான் இயக்கியுள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் தனக்கு தெரியாமலேயே 1 நிமிடத்திற்கு காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக இயக்குநர் விஜய் மில்டன் பகீர் குற்றச்சாட்டு.
— Sun News (@sunnewstamil) August 2, 2024
"இது எப்படி இடம்பெற்றது என்றே எனக்கு தெரியாது" எனக் கூறும் இவர் ரசிகர்களுக்கு ஒரு… pic.twitter.com/72oaOnbN9g
படம் குறித்து சொன்னது:
படத்தில் ஆரம்பத்திலிருந்து அடுத்து என்ன? என்று எதிர்பார்ப்பு ஏற்படும் வகையில் தான் கதையை கொடுத்திருக்கிறேன். ஆனால், படத்தில் எனக்கே தெரியாமல் ஆரம்பத்தில் ஒரு நிமிடம் காட்சி வந்திருக்கிறது. அதில் ஹீரோ யார் என்பதையும் சொல்லிவிட்டார்கள். அது தெரிந்த பின்பு படத்தை பார்த்தால் எப்படி சுவாரசியம் இருக்கும்? சென்சார் போர்டுக்கு போய் வந்த பிறகு அந்த ஒரு நிமிட காட்சியை வைத்து படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்:
இது யார் செய்த வேலை என்று தெரியவில்லை. எனக்கும் அந்த காட்சிக்கும் சம்பந்தம் இல்லை. நான் அதை எடுக்கவில்லை. தயவுசெய்து ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அந்த ஒரு நிமிட காட்சியை ஒதுக்கிவிட்டு நீங்கள் படம் பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அதை மறந்து விடுவீர்கள். இதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை என்று கூறியிருக்கிறார். தற்போது இவருடைய இந்த பதிவு தான் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






