அறிமுக இயக்குனர் யூ. அன்பு இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் படம் வால்டர். சிபிராவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ராஜா படத்தில் நடித்த ஷிரின் காஞ்ச்வாலா நடித்திருக்கிறார். பல நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அதில் சில பேர் தான் மக்கள் மனதில் நீங்காமல் நிலைத்து நின்று இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் சிபிராஜ் போலீஸ் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். தன் அப்பா சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் படத்திலிருந்து வால்டர் என்ற பெயரை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இந்த படத்தில் ரித்விகா, நட்டி என்ற நட்ராஜ், சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை ஸ்ருதி திலக் தயாரித்து உள்ளார். வால்டர் படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. சமூக பிரச்சனைகள் தெளிவாக எடுத்துக்காட்டும் படம் வால்டர்.
கதைக்களம்:
இந்த படத்தில் சிபி சத்யராஜ் கும்பகோணத்தில் போலீஸ் ஐ பி ஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இவருக்கும் கதாநாயகிக்கும் இடையே காதல் மலர்கிறது. கும்பகோணத்தில் அரசியல்வாதியாக ஈஸ்வரமூர்த்தி என்பவர் இருக்கிறார். அவரின் மகளாக ரித்விகா, மருமகனாக தொழிலதிபராக அபிஷேக் வினோத் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அரசியல்வாதி ஈஸ்வரமூர்த்திக்கு வலது கைபோல் சமுத்திரக்கனி உள்ளார். சமுத்திரகனியின் நண்பராக வருபவர் தான் நட்டி நட்ராஜ். இவர் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திடீரென்று நட்டி நட்ராஜ் மருத்துவ கவுன்சில் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் தலைமறைவாகினார். பின் பல சூழ்ச்சிகளால் சமுத்திரகனி கொல்லப்படுகிறார்.
இந்த நிகழ்விற்கு பிறகு ஊரில் உள்ள மருத்துவமனையில் இருந்து சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் கடத்தப்படுகின்றன. காணாமல் போன குழந்தைகள் சம்பந்தபட்ட பெற்றோர்கள் புகார் கொடுக்கின்றன. பின் குழந்தைகள் அடுத்தநாளே கிடைக்கிறார்கள். ஆனால், என்ன காரணம் என்று தெரியாமல் உயிர் இழந்து விடுகின்றார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணையில் சிபிராஜ் இறங்குகிறார். இதனால் சிபிராஜ்க்கு பல பிரச்சனைகள் வருகிறது. இந்த வேலையெல்லாம் செய்பவர் நட்டி நடராஜ் என்று தெரிய வருகிறது. இதனால் சிபிராஜ்க்கும் அவரின் காதலிக்கும் உயிர் போகுமளவிற்கு விபத்துகள் நடக்கிறது.
கடைசியில் சிபிராஜ் ,காதலி இருவரும் உயிர் பிழைத்தார்களா? சிபிராஜ் அந்த குற்றவாளியை கண்டுபிடித்தாரா? சமுத்திரகனியின் கொலைக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? நட்டி ஏன் தலைமறைவானார்? அவரை ஏன் கவுன்சில் பதவியிலிருந்து தூக்கினார்கள்? குழந்தை கடத்தலின் பின்னணி என்ன? என்பது சொல்வது தான் வால்டர் படத்தின் கதை. சிபிராஜ் இந்த படத்தில் போலீசாக மிரட்டி இருக்கிறார். இவர் ஏற்கனவே நாய்கள் ஜாக்கிரதை படத்தில் போலீசாக நடித்து இருந்தாலும் இந்த படத்தில் அவருடைய பாடி லாங்குவேஜ், மீசை என அனைத்தும் செம மாசு ஆக உள்ளது.
நடிகர் நட்டி முதலில் டாக்டராக நடித்திருந்தாலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பயங்கர டீவிஸ்ட். பிக் பாஸ் சீசன் 2 வின்னர் ரித்விகா இந்த படத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் கவர்ச்சியான ஒரு சில காட்சிகளில் சனம் ஷெட்டி நடித்திருக்கிறார். தமிழ் நாட்டில் காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் அதில் இருக்கும் குற்ற பின்னணி பற்றிய கதை. மெடிக்கல் கிரைம் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பரசன். இதுபோன்ற கதைகள் பல வந்திருந்தாலும் இப்படம் முற்றிலும் மாறுப்பட்டு வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பிளஸ்:
மெடிக்கல் கிரைம் பற்றி மிகவும் ஆழமாக சொன்ன விதமும், திருப்பங்கள் கொடுத்த விதமும் அருமை.
பாம்பே குரூப் என்ற புதுவகையான மருத்துவ ஊழலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சூப்பராக உள்ளது.
படத்தில் சிபிராஜ், நட்டி நடிப்பு பிரமாதமாக உள்ளது.
மைனஸ்:
படத்தில் நீண்ட காட்சிகள் இருப்பதால் கொஞ்சம் திருப்தியற்ற மனநிலையை உருவாக்கி இருக்கிறது.
படத்தில் அங்கு இங்கு என சில லாஜிக் காட்சிகள் உள்ளது.
இறுதி அலசல்:
படத்தின் மைய கரு குழந்தைகளை கடத்தும் கும்பல் மற்றும், கடத்த பட்ட குழந்தைகள் அடுத்த நாள் கிடைக்கிறது ஆனால், விரைவில் இறந்து விடுகிறது. இவ்வாறு நடக்கும் குழந்தை கடத்தலுக்கு என்ன காரணம், இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார், இவர்களை கதாநாயகன் சிபி சத்யராஜ் எப்படி கண்டுபிடிக்கிறார், இதனால் இவர் சந்திக்கும் சிக்கல்கள் தான் விறுவிறுப்பான கதை. மொத்தத்தில் வால்டர் — வேட்டை.