நடிகர் பாலா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
அதை அடுத்து சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதனால், இவர் மலையாள மொழிக்குச் சென்றுவிட்டார். பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இருந்தும் இவரால் தொடர்ந்து தமிழ் மொழி படங்களில் நடிக்க முடியவில்லை. தற்போது இவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் ஆவார்.
பாலா குறித்து:
இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகளும் இருக்கிறார். பின் சில காரணங்களால் 2019 ஆம் ஆண்டு அம்ருதாவை பாலா விவாகரத்து செய்தார். பின் மருத்துவரான எலிசபெத் என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று செய்திகள் வந்தது. இதற்கு இடையே பாலா கொடுத்த சில பேட்டிகளில் மகள் அவந்திகா குறித்து நிறைய பேசி இருந்தார்.
பாலா மகள் வீடியோ:
அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பாலாவின் மகள் அவந்திகா, என்னுடைய அப்பா என்னை ரொம்ப நேசிப்பதாகவும், என்னை மிஸ் செய்வதாகவும், எனக்கு நிறைய பரிசு பொருட்களை வாங்கி தந்ததாகவும் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அது எதுவுமே உண்மை கிடையாது. அவரை நினைக்கும் போது, அவர் குடித்துவிட்டு என்னையும் என் அம்மாவையும் செய்த கொடுமை தான் ஞாபகம் வருகிறது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
பாலா கைது:
அதைத்தொடர்ந்து பாலா வெளியிட்ட வீடியோவில், மகளே முதலில் என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி. நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை என்று உருக்கமாக பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து, பாலாவின் முதல் மனைவி அம்ருதா, ‘பாலா என்னையும், என்னுடைய மகளையும் வழிமறித்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார்’ என்று புகார் அளிக்க காவல்துறை எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டில் வைத்து அவரை கைது செய்து இருந்தது. அதற்குப்பின் நடிகர் பாலா, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பாலா வெளியிட்ட வீடியோ:
இந்நிலையில் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை நடிகர் பாலா வெளியிட்டுள்ளார். அதில், அவர் வீட்டு வாசலில் கை குழந்தையுடன் ஒரு பெண் நிற்கிறார், அருகில் நிற்கும் இளைஞர், வீட்டின் காலிங் பெல்லை அழுத்துகிறார். சிறிது நேரம் அங்கு நின்று விட்டு கதவு திறக்காததால், அவர்கள் செல்கின்றனர். இதுகுறித்து நடிகர் பாலா, ‘இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டேன். அதிகாலை 3.45 மணிக்கு என் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். என்னை ஏதோ ஒரு வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது’ என்று கூறியுள்ளார்