தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகளின் வாரிசுகள் தற்போது நடிகர்களாக இருந்து வருகிறார்கள். விஜய், சூர்யா துவங்கி சிம்பு, தனுஷ் வரை பாலிவுட்டை போல எங்கும் வாரிசு நடிகர்கள் அதிகம்தான். பெரும்பாலும் சினிமா நடிகர்களின் வாரிசுகள் மீண்டும் சினிமாவிலேயே தான் கவனம் செலுத்துவார்கள். ஆனால், தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான சின்னி ஜெயந்த்தியின் மகன் சினிமா பக்கம் வராமல் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி ஆகி தற்போது துணை ஆட்சியராக பதவியேற்று இருக்கிறார்.
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் சின்னி ஜெயந்த்தும் ஒருவர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பல குரலில் பேசும் கலைஞர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் சின்னி ஜெயந்துக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சித்தார்த் ஜெயநாத், ஸ்ருஜன் ஜெய்நாத் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருஜன் ஜெய், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்வில் ஸ்ருஜன் ஜெய் தேர்ச்சி பெற்றது மட்டுமல்லாமல் இந்திய அளவில் 75 ரேங்கில் அவர் தேர்ச்சி பெற்று இருந்தார். இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஸ்ருஜன் ஜெய், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திரைத்துறையில் சேர வழி காட்டாமல் மக்களுக்கு சேவை செய்ய ஊக்குவித்த சின்னி ஜெயந்திக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.