நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் ஆர் எஸ் சிவாஜி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இணை இயக்குனர், ஒலி வடிவமைப்பாளர், லைன் ப்ரொடியூசர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் அதிகம் தமிழ் மொழி படங்களில் தான் நடித்திருக்கிறார். குறிப்பாக, கமலஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களில் இவர் அதிகம் நடித்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இவர் பேசிய ‘சார் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க’ என்ற வசனம் மிகப்பெரிய பிரபலாமானது.மேலும், இவர் அதிகம் நகைச்சுவை இடங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு இவர் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்திருந்த கார்க்கி படத்திலும் நடித்திருந்தார்.
ஆர்.எஸ்.சிவாஜி நடித்த படங்கள்:
இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவர் அபூர்வ சகோதரர்கள், மாப்பிள்ளை, குணா, மகளிர் மட்டும், பூவே உனக்காக, லிட்டில் ஜான், வில்லன், அன்பே சிவம், ஆய்த எழுத்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, குஸ்தி, உன்னை போல் ஒருவன், கணிதன், எட்டு தோட்டாக்கள், வனமகன், கோலமாவு கோகிலா, தாராள பிரபு, சூரரைப் போற்று போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடித்திருந்த படம் லக்கி மேன். இந்த படம் நேற்று தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரேச்சல் ரபேக்கா, வீர பாபு , அப்துல் அலி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.சிவாஜி மரணம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை திடீரென்று உடல்நல குறைவு காரணமாக சிவாஜி காலமாக இருக்கிறார். இவருடைய இறப்பு பலருக்குமே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவருடைய புகழ்பெற்ற ‘சார் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க…’ எனும் நகைச்சுவை வசனமே இன்றும் பொருந்துகின்றது