ரஜினியை சங்கி என்று சோசியல் மீடியாவில் விமர்சித்து வருவதற்கு ஐஸ்வர்யா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெயிலர்.
இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க சமீப காலமாகவே ரஜினி குறித்து சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் அதிக வைரலாகி வருகிறது. குறிப்பாக, மத்திய அரசுடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு இவர் ஆதரவு கொடுத்திருந்தார், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் சமூகவிரோதிகள் என்று கூறியிருந்தார்.
ரஜினி சங்கி குறித்த சர்ச்சை:
அதன் பின் கடந்த ஆண்டு உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யா காலில் ரஜினி விழுந்திருந்தார். சமீபத்தில் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ரஜினி அயோத்தி சென்றிருந்தார். இதனாலேயே பலரும் அவரை சோசியல் மீடியாவில் ‘ரஜினி சங்கி’ என்று விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த லால் சலாம் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா பதில் கொடுத்து இருந்தார். லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.
விழாவில் ஐஸ்வர்யா சொன்னது:
இந்த படத்தில் ரஜினி அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா, என்னுடைய அப்பாவை சங்கி என்று எல்லோரும் சொல்லும்போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன் என்னுடைய அப்பா சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால் அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். அவர் மனிதநேயவாதி.
கண்கலங்கிய ரஜினி :
இந்த படத்தில் அவரை தவிர அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார். ஐஸ்வர்யா இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போதே ரஜினி மற்றும் லதா இருவரும் கண் கலங்கினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நான் சங்கியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். பாஜாவுக்கு எதிராக கொள்கை வைத்திருப்பவர்களும் எதிர் கருத்து வைத்திருப்பவர்களும் எங்களை இழிவுபடுத்தும் ஒரு சொல்லாக சங்கி என்பதை பயன்படுத்துகிறார்கள். இது ரொம்ப நாளாகவே நடந்து கொண்டிருக்கின்றது.
ரஜினி கொடுத்த விளக்கம் :
சங்கி என்றால் என்ன என்று என்ன அர்த்தம் என்று நான் சொல்லட்டுமா? இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டின் நலன்களை சமரசம் செய்து கொள்ளாத உண்மையான குடிமக்கள் தான் சங்கி.அப்படி எங்களை நீங்கள் சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமை தான் என்று கூறியிருக்கிறார். மேலும், இது தொடர்பாக ரஜினிகாந்த், சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை. என்னுடைய மகள் சரியாகத்தான் பேசுகிறார். அப்பா ஆன்மீகவாதி அவரை ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்பது தான் என்னுடைய மகளின் நோக்கம் என்று கூறி இருந்தார்.