ஹிட் மற்றும் பிளாப்.! அஜித்தின் பொங்கல் ரிலீஸ் ஒரு ரீ-கேப்.!

0
503

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம்’ நாளை மறுநாள் திரைக்கு வரவிருக்கிறது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்துடன் களம் காண இருக்கிறது.

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே பண்டிகை நாட்களிலோ அல்லது விடுமுறை அதிகம் உள்ள நாட்களிலோ வெளியாவது தான் வழக்கம். அதிலும் பொங்கல் பண்டிகை கொஞ்சம் ஸ்பெஷல் காரணம் குறைந்தது 3,4 நாட்களாவது விடுமுறை இருக்கும்.

சரி,தற்போது அஜித் விடயத்திற்கு வருவோம். அமராதி முதல் தற்போது வெளியாக இருக்கும் விஸ்வாசம் வரை அஜித்தின் ஒரு சில படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. அதில் எந்த படம் ஹிட் மற்றும் எது பிளாப் என்பதை தற்போது காணலாம்.

வான்மதி :

முதன் முதலில் அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் ‘வான்மதி’. 1996ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றியும் பெற்றது. வான்மதி’ வெற்றியைத் தொடர்ந்து ‘காதல் கோட்டை’ அதே வருடம் ஜூலை மாதம் மாபெரும் ஹிட் அடைந்தது.

நேசம் :

1997 ஆம் ஆண்டு சுபாஷ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையன்று வெளியாகியது. சத்ரியன் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனரின் படம் தான் இது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.

தொடரும்:

1999ஆம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் ரமேஷ் கண்ணா இயக்கத்தில் வெளியான படம்தான் ‘தொடரும்’. ‘காதல் கோட்டை’ வெற்றி ஜோடியான தேவையணி நடித்திருந்தார். இந்த படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தீனா :

இந்த படம் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி அறியவேண்டியது இல்லை. 2000 ஆம் ஆண்டு விஜய் நடித்த பிரிஎண்ட்ஸ் படத்திற்கு போட்டியாக களமிறங்கிய அஜித்திற்கு இந்த படத்தின் மூலம் தான் தல என்ற பட்டமும் கிடைத்து.

ரெட் :

தீனா, சிட்டிசன் வெற்றியை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு பொங்கலில் ரெட் பெரிய ஓப்பனிங்குடன் ரிலீஸானது. ஆனால், படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தாமல் போக ‘ரெட்’ படம் படு தோல்வியடைந்தது.

பரமசிவன் :

நான்கு வருடங்கள் கழித்து 2006ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் ‘பரமசிவன்’ வெளியானது. பி.வாசு, அதற்கு முன்புதான் ‘சந்திரமுகி’ எனும் மெகா பிளாக்பஸ்டரைக் கொடுத்திருந்தார் என்பதால் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படமும் தோல்விதான்.

ஆழ்வார்:

பரமசிவன் படத்தை தொடர்ந்து அடுத்த வருடமே தீபாவளிக்கு ‘வரலாறு ‘ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஜித்தின் ‘ஆழ்வார்’ திரைப்படம் விஜய்யின் ‘போக்கிரி’ படத்திற்கு போட்டியாக வந்தது. ஆனால், ஆழ்வார் படத்தில் அஜித்தால் ஆளமுடியவில்லை.

வீரம் :

ஆழ்வார் படம் வெளியாகி ஏழு வருடங்கள் கழித்து அஜித்தின் ‘வீரம்’, விஜய்யின் ‘ஜில்லா’ படங்கள் 2014 பொங்கலுக்கு வெளியாயின. இதில் வீரம் நல்ல ஹிட் அடிக்க, ஜில்லா விஜய்யின் வழக்கமான படமானது. தற்போது வீரம் படத்தை இயக்கிய சிவா மீண்டும் அஜித்தை வைத்து பொங்கல் ரேஸை தொடங்கவுள்ளார்.