சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் பல்வேறு இளம் நடிகைகள் வந்து கொண்டு இருகின்றார்கள். அந்த வகையில் சிறு வயதிலேயே தனது நடிப்புத்திறன் மூலம் அனைவரையும் வியக்க வைத்தவர் நடிகை அம்மு அபிராமி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நடிகை அபிராமி 2017 ஆம் ஆண்டு வெளியான ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்து இருந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது “ராட்சசன்” படத்தில் தான்.
இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்த படம் ராட்சசன். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகை அமலா பால், ராதாரவி, காளி வெங்கட், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை அபிராமி. இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபாலுக்கு அடுத்த படியாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது நடிகை அபிராமியை தான். மேலும், ராட்சசன் திரைப்படம் மூலம் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை அபிராமி.
இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடிப்பில் வந்த அசுரன் படத்தில் நடிகை அம்மு அபிராமி நடித்திருந்தார். நடிகை அபிராமி அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளிவந்த படம் “தம்பி”. இந்த படத்திலும் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் ராட்சசன் படம் அம்மு அபிராமி தற்போது காட்டுவாசி பெண்ணாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ரமேஷ் ஜி இயக்கும் படம் “அடவி”. இந்த படத்தில் நான் மகான் அல்ல படத்தின் புகழ் வருண் கிஷோர் அவர்கள் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தான் நடிகை அம்மு அபிராமி நடிக்கிறார். ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் கே.சாம்பசிவம் அவர்கள் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சரத் ஜடா இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் இயக்குனர் ரமேஷ் ஜி அவர்களே இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் இந்த மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது.
இந்த படம் குறித்து இயக்குனர் ரமேஷ் அவர்கள் கூறியது, இயற்கை எழில், அழகு இருக்கும் ஒரு மலைப்பகுதியில் ரெஸ்டாரண்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை பணக்கார கும்பல்கள் விரட்ட முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தைச் சேர்ந்த வினோத், அபிராமி மக்களுடன் ஒன்று சேர்ந்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? இல்லையா? பணக்காரர்களின் எண்ணம் நிறைவேறியதா? என்பது தான் படத்தின் கதை. இந்த படத்தில் சப்வே என்ற மலைவாழ் மக்களின் தெய்வத்தை பற்றி கூறி உள்ளார்கள். இந்த படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்கள் வாழ்க்கையில் நிகழும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது ஆகும் என்று கூறினார்.