தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வருடம் வருடம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்பது சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கும், பலரின் வாழ்க்கைக்கு துணையாகவும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம்.

இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின் கடந்த 8,9 சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இவரின் பேச்சும் கருத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி:
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேடும் பணி தொடங்க இருக்கிறது. இதற்கு முந்தைய சீசங்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள், விஜய் டிவி சீரியல் நடிகர்கள் என பலருமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் புது முயற்சியாக பிக் பாஸ் தி காமன் மேன் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறார்கள். இது தொடர்பான புரோமோவும் வெளியாகி இருக்கிறது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் சாதாரண நபர்களும் கலந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் 10:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் எவருமே தங்களைப் பற்றிய விபரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவதற்கான காரணத்தையும் வீடியோவாக அனுப்பி வைக்க வேண்டும் என்று பிக் பாஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக நிகழ்ச்சிக்கு தொடர்புடையவர்கள் அளித்த பேட்டியில், சினிமா, டிவி பிரபலங்கள் மட்டும் இல்லாமல் சாதாரணமான மக்களுமே இதற்கு முன்பு கூட நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார்கள். முதல் சீசனில் டைட்டில் வென்ற ஆரவ் கூட அந்த நிகழ்ச்சிக்கு முன் அவ்வளவாக மக்கள் மத்தியில் அறியப்படாதவர் தான். இருந்தாலும் அடுத்தடுத்த சீசனில் போட்டியாளர்களாக சினிமா டிவி நட்சத்திரங்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சி அப்டேட்:
இதை ஆடியன்ஸ் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு கட்டத்தில் ஒரு விதமான சலிப்பையும் உண்டாக்கி விட்டது. அதுலயும் விஜய் டிவி நடிகர்கள் அதிகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் சோசியல் மீடியாவில் ட்ரோல் மெட்டீரியலாக பேசப்பட்டது. கடந்த சீசனில் சமூக ஊடக பிரபலங்களை இறக்கிப் பார்த்தார்கள். அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. சாதாரண பார்வையாளர்கள் தரப்பில் இருந்தும் போட்டியாளர்களை அனுமதித்தால் அது நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கும் என்று நினைத்துதான் இந்த வருடம் இந்த முயற்சியை தொடங்கி இருக்கிறார்கள்.






