பிகில் – விமர்சனம்.

0
3835
Bigil

இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 25) வெளியாகியுள்ளது. விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷாராப், யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ், இந்துஜா போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தின் முழு விமர்சனத்தை தற்போது காணலாம்.

Image result for Bigil"

கதைக்களம் :

- Advertisement -

சமீபத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்டபார்வை’ படத்தை போலவே இந்தப் படமும் பெண்கள் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு படமாகவே அமைந்துள்ளது. அதுவும் இது போன்ற கதைகளில் அஜீத், விஜய் போன்ற மாபெரும் மாஸ் நடிகர்கள் நடிப்பது மிகவும் பாராட்டக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

பிகில் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு இந்த படத்தில் மூன்று விஜய் என்று குழம்பிப் போன ரசிகர்களுக்கு படத்தில் இரண்டு விஜய் மட்டும்தான் என்று ஆரம்பத்திலேயே போட்டு உடைத்துள்ளார் அட்லி. இந்த படத்தில் மைக்கேல் ராயப்பன் கதாபாத்திரத்தில் வரும் விஜய் ஒரு கால்பந்து விளையாட்டு வீரராக இருந்து வருகிறார். கால்பந்து தான் தனது வாழ்வின் மூச்சாக இருந்து வரும் விஜய், தனது வாழ்வில் ஏற்படும் சில பிரச்சனைகள் காரணமாகவும், வன்முறை காரணமாகவும் தனது கனவை கைவிட்டு பின்னர் ஏரியாவுக்குள் அட்ராசிட்டி செய்துவருகிறார். ஆனால், இவர் செய்து வரும் சில வன்முறைகளை இவரை மீண்டும் கால்பந்து விளையாட்டிற்கு இழுத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

-விளம்பரம்-
Image result for Bigil"

மைக்கேலின் நண்பராக வரும் கதிர் தனது ஏரியாவில், வாழ்வில் முன்னேறத் துடிக்கும் வசதியற்ற மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களை வைத்து ஒரு கால்பந்தாட்ட அணியை உருவாக்குகிறார். மேலும், அதற்கு கதிர் தான் பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஒருகட்டத்தில் கதிருக்கு மோசமான காயம் ஏற்பட்டு விடவே அவர் உருவாக்கிய அணிக்கு பயிற்சியாளர் இல்லாமல் போய் விடுகிறது. பின்னர், மைக்கல் எனப்படும் பிகில் கதிர் உருவாக்கிய பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளராக களமிறங்குகிறார், ஆனால், மைக்கேலை ரவுடியாக மட்டுமே அறிந்திருக்கும் அந்த பெண்கள், ரவுடித்தனம் செய்து வரும் ஒரு நபரை தாங்கள் பயிற்சியாளராக ஏற்கமாட்டோம் என்று ஆரம்பத்தில் பிரச்சனை செய்கிறார்கள்.

அதன் பின்னர் மைக்கேல் யார் என்பது அவர்களுக்கு தெரிய வர பின்னர் மைக்கேலின் தலைமையில் அந்த பெண்கள் குழுவினர் பயிற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்த அணியில் இருக்கும் பல்வேறு பெண்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்தும் சேரிகளில் இருந்தும் வரும் பெண்களாக இருந்து வருகிறார்கள். மேலும், அதே பகுதியில் ஒரு டானாக இருந்து வரும் மைக்கேலின் தந்தையான ராயப்பன் தனது பகுதி மக்களுக்கு நல்லது செய்துவருகிறார். அதேபோல தனது சமுதாய மக்கள் விளையாட்டின் மூலம் தங்களின் அடையாளத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதை ஆணித்தரமாக கூறிவருகிறார் ராயப்பன். இதனால் மைக்கேலுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார் ராயப்பன். இறுதியில் மைக்கேல் பயிற்சி கொடுத்த பெண்கள் சாதித்தார்களா இல்லையா? ராயப்பன் நிலை என்ன ஆனது ? மைக்கேல் எப்படி பெண்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை சாதிக்க வைக்கிறார். சமுதாயத்தில் பெண்களுக்கு இருக்கும் கடமைகளும் அவர்களின் முக்கியத்துவமும் என்ன என்பதையும் இந்த படம் விளக்குகிறது.

Image result for Bigil"

ப்ளஸ் :

படத்தில் ராயப்பனாக வரும் விஜய் தான் மிகப்பெரிய பலம். படத்தில் வரும் ஒரு சில காட்சிகள் தாறுமாறாக இருக்கிறது, குறிப்பாக காவல் நிலையத்தில் வரும் காட்சிகள் மற்றும் ராயப்பன் வரும் ஒவ்வொரு காட்சிகளும் வெறித்தனமாக இருக்கிறது. இந்த காட்சிகளில் ரசிகர்கள் கண்டிப்பாக உற்சாகம் அடைவார்கள். அதேபோல ராயப்பன் கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய் ஒரு திக்குவாய் ஆக நடித்திருக்கிறார் விஜய். இது போன்ற கதாபாத்திரத்தை விஜய் ஏற்று நடிப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், ராயப்பன் கதாபாத்திரத்திற்காக நடிகர் விஜய் மிகவும் மெனக்கெட்டு உள்ளார். அதற்கு நிச்சயம் ரசிகர்கள் இருந்தும் இருந்து பாராட்டு கிடைக்கும். அதிலும் ரயில் நிலையத்தில் ராயப்பன் வரும் காட்சி மிகவும் தாறுமாறாக இருக்கிறது.

அதேபோல படத்தின் இசையை ஆர் ரகுமான் மிகவும் தெறிக்கவிட்டுள்ளார். படத்தின் ஒளிப்பதிவும் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்திற்கு தேவையான போல இருக்கிறது. முதல் முறையாக ஏ ஆர் ரகுமான் திரையில் தோன்றியுள்ளது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. படத்தில் வில்லனாக வரும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஒரு மேல்தட்டு பிஸ்னஸ் மேனாக வருகிறார். அவருக்கும் விஜய்கும் நடக்கும் காட்சிகள் நன்றாகவே அமைந்துள்ளது. மேலும், படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இடம் பெற்றுள்ள இந்துஜா ரேபா, அம்ரிதா, இந்திரஜா, வர்ஷா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணிகளை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அதேபோல வழக்கமாக அட்லி யாராவது ஒருவரை படத்தில் சாகடித்துவிட்டு, அதன் மூலம் ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றுவிடுவார். அந்த வகையில் இந்த படத்தில் அட்லீ சாகடிக்கும் அந்த கதாபாத்திரம் யார் என்பதை நீங்கள் படத்தில் பார்த்தால் மிகவும் ஷாக்காகி விடுவீர்கள். வேண்டுமென்றால் ஒரு குளு மட்டும் தருகிறோம் அது கதிரும் இல்லை நயன்தாராவும் இல்லை.

Image result for Bigil"

மைனஸ் :

படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்று கூற வேண்டுமென்றால் முதல்பாதியில் ஒரு நீளம் தான். முதல் பாதியை நகர்த்தி செல்ல அட்லீ மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். முதல்பாதியில் ஒரு பத்து முதல் பதினைந்து நிமிட காட்சிகளை நீக்கினால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் இருந்தாலும் படத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கிறது. அதிலும் முதல் பாதியை கொண்டு செல்ல அட்லீ காதல் ஆக்ஷன் ட்ராமா என்று அனைத்தையும் புகுத்தி மிகவும் கஷ்டப்பட்டு நகர்த்தியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

அவ்வளவு பெரிய கால்பந்தாட்ட வீராராக இருக்கும் நபரை பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இருக்கும் நபர்கள் யாருக்கும் தெரியாமல் இருப்பது தான் ஓவர்.

நயன்தாரா மற்றும் விஜய் வரும் காட்சிகள் ரசிகர்களை கொஞ்சம் சோதித்து விடுகிறது. இவர்கள் இருவருக்கும் வரும் ரொமான்ஸ் காட்சிகளும் ராஜாராணி மெர்சல் போன்ற படங்களில் வரும் ரொமான்ஸ் காட்சிகளைப் போல இல்லை என்பது கொஞ்சம் வருத்தம். படத்தில் யோகி பாபு மற்றும் விவேக் இரண்டு பேர் இருந்தும் விழுந்து விழுந்து சிரிக்கும் எந்த காட்சிகளும் படத்தில் இடம்பெறவில்லை என்பது மேலும் ஒரு வருத்தம்.

Image result for Bigil"

இறுதி அலசம்:

படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் வரும் விஜய் மிரட்டி இருக்கிறார். படத்தில் கமர்சியல் படத்திற்கு தேவையான ஆக்ஷன், காதல், சென்டிமண்ட் என்று அனைத்தையும் வைத்து பிகில் மூலம் விசிலடித்துள்ளார் அட்லீ. அட்லியின் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, மெர்சல் தெறி போன்ற படங்களில் லேடிஸ் சென்டிமென்ட்டை கொஞ்சம் கொஞ்சம் தெளிக்க விட்டிருந்தார். ஆனால், இந்தப் படத்தில் ஒட்டுமொத்த பெண்கள் சென்டிமென்ட்டையும் களமிறங்கி இருக்கிறார் அட்லீ. இந்த படம் கண்டிப்பாக பெண் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்துப் போய்விடும். அதிலும் விஜய் ரசிகர்களாக இருந்தால் கண்டிப்பாக வெளியே வரும்போது ஈர விழிகளுடன் பெண்கள் வெளியே வருவது உறுதி. மொத்தத்தில் இந்த படத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்து விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோ மூலம் நல்ல சமூக கருத்தினை உணர்த்தியிருக்கிறார் அட்லி. ஆனால், பிகிலின் சத்தம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது என்பதே உண்மை. இருப்பினும் விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் மாபெரும் ட்ரீட்டாக அமையும். ஆனால், நடுநிலை ரசிகர்களுக்கு இந்த படம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாது. குடும்ப ரசிகர்கள் என்றால் இந்த படம் நிச்சயம் ஒரு தரமான படமாக இருக்கும்.

Advertisement