பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ‘புஷ்பா 2 ‘ படத்திற்கு கொடுத்திருக்கும் விமர்சனம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.
மேலும், இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திரா மாநிலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
புஷ்பா 2 :
அதனைத் தொடர்ந்து , இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில வருடங்களாகவே புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த தாமதத்துக்கு காரணம் அல்லு அர்ஜுனுக்கும் இயக்குனர் சுகுமாருக்கும் இடையே இருந்த பிரச்சனை தான் என தகவல்கள் பரவின. ஒரு வழியாக படம் நேற்று உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பு :
மேலும், இப்படம் வழக்கமான தெலுங்கு மசாலா படம் போல்தான் இருக்கிறது. அல்லு அர்ஜுன் மட்டும் தான் இந்தப் படத்தை ஒட்டுமொத்தமாக தோலில் சுமக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்திருந்தது. அதே சமயம் முதல் பாகத்தில் பாடல் எல்லாம் அருமையாக இருந்தன. ஆனால், இந்த படத்தில் அப்படி இல்லை என்று சிலர் கருத்தை முன் வைத்திருந்தார்கள். இருந்தாலும் முதல் நாளில் இப்படம் 175 கோடிரூபாய் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவித்திருந்தது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் :
இந்நிலையில் தற்போது பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ‘புஷ்பா 2’ படத்தின் விமர்சனத்தை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அதில், புஷ்பா படத்தின் முதல் பாகம் எப்படி ஓடியது என்பதே பெரிய விஷயம். இதில் இரண்டாவது பாகத்தை வேறு எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்துல முதல் பாதி என்னவோ நல்லா தான் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியெல்லாம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. படத்தின் முதல் சீனிலேயே ஜப்பான் காரன் தமிழில் பேசுகிறான். இங்கிருந்து அங்கு சென்றவன் ஜப்பானிய மொழியில் பேசுகிறான்.
ஒரு பக்கம் சைடு வந்துடுச்சு :
இதிலிருந்தே நீங்க தெரிஞ்சுக்கோங்க. படத்தின் முதல் பாதியில் சில சீன்கள் நல்லா தான் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு காட்சியும் ஜவ்வு மாதிரி இழுத்து வைத்திருக்கிறார்கள். அதேசமயம் டெக்னிக்கலாக படம் நல்லா இருக்கிறது. எல்லாரும் இந்தப் படத்தை ஹீரோ தான் தனது தோளில் சுமந்து இருக்கிறார் என்று சொல்வார்கள். அப்படி சுமந்து தான் அல்லு அர்ஜுனின் தோள்பட்டை ஒரு பக்கம் சைடு வாங்கிடுச்சு போல. ஆனால், இந்த படத்தைப் பார்க்க ஒரு மன தைரியம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.