இந்தியாவில் இதுவரை 2014 பேர் பாதிக்கப்பட்டும், 56 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். அதிலும் தமிழகத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிர் இழந்து உள்ளார். காட்டுத் தீயை விட வேகமாக கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார் பிரதமர் மோடி. இதனால் மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே பாதுகாக்க இருக்க வேண்டும் என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், பிரபலங்களும் கொரோனா விழிப்புணர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்திய அரசாங்கம், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என பல பேர் தங்களுடைய உயிரை பணய வைத்து இந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு முகக்கவசங்கள், சானிடைசர் போன்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முகக்கவசங்கள், கைகளை கழுவ பயன்படுத்தும் சானிடைசர் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தேவை அதிகம் ஏற்பட்டுள்ளது. அதனால் முகக்கவசங்கள், சானிடைசர் தட்டுப்பாடு நிலவி உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி போலியான, தரம் இல்லாத முகக்கவசங்கள், சானிடைசர்களை தயாரித்து வருகிறார்கள். அதோடு கூடுதல் விலையும் வைத்து விற்கின்றார்கள்.
இந்நிலையில் சென்னை காவல்துறை இந்த பிரச்சனையை போக்க ஒரு புது முயற்சியை கையாண்டு உள்ளது. ‘தன் கையே தனக்குதவி’ என்ற பழமொழிக்கு ஏற்ப முகக்கவசங்கள், சானிடைசர் தயாரிப்பில் சென்னை காவல்துறை களமிறங்கியுள்ளது. சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் தையல் தெரிந்த பெண்காவலர்கள், வேதியியல் படித்த ஆண் காவலர்கள் மூலம் இந்தப் பணிகளை செய்து வருகின்றன. சென்னை காவல் துறையினர் வீடுகளிலிருந்து தையல் இயந்திரங்கள் புதுப்பேட்டை அலுவலங்களுக்கு கொண்டு வரப்பட்டு தையல் தெரிந்த பெண் காவலர் மூலம் முககவசங்களை தயாரித்து வருகின்றன.
இதைப்போல வேதியியல் படித்த ஆண் காவலர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியதன்படி மருந்தியில் துறை டாக்டர்கள் சானிடைசர்களைத் தயாரிக்கும் பயிற்சியை அளித்தனர். சானிடைசர்களைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்மூலம் 1,000 லிட்டர் சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து புதுப்பேட்டை ஆயுதப்படை போலீஸார் கூறியிருப்பது, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காகக் காவலர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து ஈடுபட்டு உள்ளனர்.
ஆகையால் அவர்களுக்குத் தேவையான முகக்கவசங்கள், சானிடைஸர்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் தான் தரமான முகக் கவசங்களையும், சானிடக்சர்களையும் காவல்துறை சார்பில் தயாரிக்க முடிவு செய்தோம். இதற்காக நாங்கள் தையல் தெரிந்த 30 பெண் காவலர்களுக்கும், வேதியியல் படித்த ஆண் காவலர்களுக்கும் தேர்வு செய்தோம். முகக் கவசங்களைத் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள்களான நான் ஊவன் பேப்ரிக் மற்றும் மெல்போன் பேப்ரிக் ஆகிய ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப் பொருள்களைக் கொண்டு 60,000 முகக் கவசங்களைத் தயாரிக்க முடியும்.
ஒரு முகக்கவசத்தைத் தயாரிக்க 1.50 ரூபாய் தான் செலவாகிறது. தினமும் நாங்கள் 3,000 மூன்றடுக்கு முகக் கவசங்கள் தயாரித்து வருகிறோம். இந்தக் கவசங்கள் காவல்துறையினருக்கு மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளோம். அதே போல் முதல்கட்டமாக 1,000 லிட்டர் சானிடைஸர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது . பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்குத் தினமும் 100 மி.லி சானிடைஸர்கள் கொடுக்கப்படுகின்றன என்று கூறினார். காவல்துறையினர் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.