தவெக தலைவர் விஜய் மீது சென்னை காவல் ஆணையத்தில் புகார் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம்.

இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் விஜய் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பின் இவர் தன் கட்சியின் கொடி, பாடல், உறுதிமொழி, கொள்கை எல்லாம் அறிவித்து இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார். இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள்.
விஜய் அரசியல்:
அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்து இருந்தார். அதன் பின் தன் கட்சிக்காக புது செயலியை உருவாக்குவதாக அறிவித்து இருந்தார். இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்து இருப்பதால் அலுவலகத்தில் விழா நடத்தி இருந்தார். இது தொடர்பாக விஜய் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து இவர் தன் கட்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தான் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய கட்சியின் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.
https://www.youtube.com/watch?v=CVK-7K8evI4
இஃப்தார் நோன்பு:
இதை அடுத்து சில தினங்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டை ஓஎம்சிஏ மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது. இதில் 3000 இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரம்மாண்ட விருந்தும் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் உட்பட கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது அனைவரும் அறிந்ததே.

விஜய் மீது புகார்:
இப்படி இருக்கும் நிலையில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை தவெக தலைவர் விஜய் இழிவுப்படுத்திருக்கிறார் என்று தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்குப்பின் தமிழ்நாடு சுன்னத் ஜமாத்தின் மாநில பொருளாளர் செய்யத் கவுஸ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் இழிவுபடுத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத குடிகாரர்களும் ரவுடிகளும் கலந்து கொண்டு இஸ்லாமியர்களை கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.

புகார் அளித்த காரணம்:
பண்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி புண்படுத்தும் விதமாக நடத்தி இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதத்திற்கு கொஞ்சமும் வருத்தம் தெரிவிக்காமல் விஜய் மனித தன்மையற்ற நபராக இருக்கிறார். ஏற்கனவே விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடத்தப்பட்டது. அதில் எந்தவித சரியான முறைகளை செய்யாமல் மாநாட்டை நடத்தி இருந்தார்கள். மாநாட்டில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் ரொம்பவே அவஸ்தைப்பட்டு சில பேர் மயங்கியும் விழுந்திருந்தார்கள். எந்தவித முன்னேற்பாடுமே சரியாக செய்யாமல் விட்டதால் தான் இந்த விபரீதமும் நடந்தது. இது போன்ற தேவையற்ற விபரீதங்களை உருவாக்கும் வகையில் விஜய் நடத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போல நடத்துவதாலும் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாத வெளிநாட்டு பாதுகாவலர்களை வைத்துக்கொண்டு அலைவதாலும் தான் இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. இதுபோன்று இனி நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நாங்கள் பப்ளிசிட்டிக்காக கொடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.






