அஜித்தின் மேலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருப்பவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் இயக்கத்தில் வெளிவந்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குகிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதேபோல் நயன் அவர்கள் O2 காட்பாதர், கனெக்ட், ஜவான், திரில்லர் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் அனைவரும் எதிர்பார்த்த இவர்களுடைய திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக இருவரும் திருச்சியில் உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுக்கு திருச்சியில் இருந்தார்கள்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்:
இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக நடக்க இருக்கிறது. இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் மிக முக்கியமான நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். தற்போது இவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ஜுன் 9ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கிறது.
பத்திரிகையாளர் சந்திப்பு:
முழுக்க முழுக்க பாரம்பரியமான முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதையொட்டி விக்னேஷ் சிவன் சென்னை தாஜ் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் இருக்கும் பிரபலமான அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்தினரும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். பிரபலமான தனியார் செய்தித் தொலைக்காட்சியை சேர்ந்த நிருபர் ஆனந்த், விக்னேஷ் சிவனுடன் புகைப்படம் எடுக்க சென்றார்.
அஜித் மேலாளர்- நிரூபர் தகராறு:
அப்போது அங்கிருந்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா நிருபர் ஆனந்தை பார்த்து மிரட்டல் தொனியில் யாரென கேட்டு செய்தி நிறுவனம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. பின் நிருபர் ஆனந்த்தும் பதில் பேசி இருக்கிறார். பிறகு இருவரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து ஆனந்தன், சுரேஷ் சந்திராவை அழைத்து வருத்தம் தெரிவிக்க முயன்றிருக்கிறார். ஆனால், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆனந்தின் அழைப்பை ஏற்கவில்லை. பின் சுரேஷ் சந்திரா மற்றும் அவரது உதவியாளர்கள் நாசர், தியாகு ஆகியோர் ஆனந்தை தாக்கியிருக்கிறார்கள்.
அஜித் மேலாளர் மீது புகார்:
அதுமட்டுமில்லாமல் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி உள்ளனர். இதுகுறித்து நிருபர் ஆனந்தன், அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் அவரது உதவியாளர்கள் மீது அண்ணாசாலை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், செய்தி சேகரிக்க சென்ற என்னையும் நிறுவனத்தையும் சுரேஷ் சந்திரா அவதூறாக பேசி இருக்கிறார். என்னை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்திலிருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளி இருக்கிறார். ஆகவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.