தனுஷ்- ஐஸ்வர்யாவின் வேலையில்லா பட்டதாரி பட காட்சிக்கு எதிரான வழக்குக்கு நீதிபதி அளித்து இருக்கும் தீர்ப்பு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த படம் வேலையில்லா பட்டதாரி.
இந்த படத்தை வேல்ராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்திருந்தார். இந்த இரண்டு பாகங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்து இருப்பார். ஆனால், அந்த காட்சி வரும் போது புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்துதல் தடை மற்றும் முறைப்படுத்த சட்ட விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ், இயக்குனர் வேல்ராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் நடவடிக்கையை தொடரவில்லை என மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்சார் போர்டு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தனுஷ் தரப்பில் கோரிக்கை:
இதனைத் தொடர்ந்து தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும், மேற்கொண்டு தவறு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும், தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. மேலும், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்துதல் தடை சட்ட விதிகளை மீறியதாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தார். பின் இந்த வழக்கு தொடர்பாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தார்கள்.
நீதிமன்றத்தில் விசாரணை:
இதனை அடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராக விலக்கு அளித்து, வழக்கை இறுதி விசாரணைக்காக தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
நீதிபதி உத்தரவு:
இந்த நிலையில் இன்று இந்த வழக்கிற்கான தீர்ப்பு வெளியாகி இருக்கிறது அதில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.