ஆஸ்கர் விருது வாங்கிய ஆவண படத்தை இயக்கிய இயக்குனர் மீது பொம்மன் பெள்ளி அளித்திருக்கும் குற்றச்சாட்டு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானை குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு யானைகள் சில மாதமே ஆன நிலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது.
மேலும், இந்த யானை குட்டிகளை வளர்த்து வருபவர்கள் தான் பொம்மண் மற்றும் அவருடைய மனைவி பெள்ளி. இவர்கள் இந்த யானை குட்டிகளை எப்படி எல்லாம் பராமரிக்கிறார்கள்? யானை மீது எப்படி அன்பு செலுத்துகிறார்கள்? என்பது குறித்த ஆவண படமாக தான் இந்த The Elephant Whisperers. இந்த படம் 2022 ஆம் ஆண்டு நெட்ப்ளிக்சில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படத்தை கார்திகி கோன்சால்வ்ஸ் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படம் குறித்து பல பிரபலங்கள் பாராட்டி இருந்தார்கள்.
ஆஸ்கர் விருது கிடைத்த படம்:
மேலும், இந்த Elephant Whisperers படம் இந்தியாவின் முதல் ஆஸ்கர் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. The Elephant Whisperers படத்திற்காக ஆஸ்கர் விருது கிடைத்ததை அடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக பொம்மன்-பெள்ளி இருவருக்கு பேட்டி எல்லாம் அளித்து இருந்தார்கள். அதோடு இவர்களை பலரும் சந்தித்து புகைப்படம் எடுத்து சென்று இருந்தார்கள். இதனையடுத்து இப்படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெள்ளிக்கு பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் வந்தன.
மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் இந்த தம்பதியை அழைத்து பாராட்டி 1 லட்சம் காசோலை வழங்கி சிறப்பித்தார். பின் இவர்களை பாராட்டும் வகையில் மும்பையில் விழா ஓன்றும் நடந்தது. சமீபத்தில் கூட இவர்களை நேரில் சந்தித்து குடியரசு தலைவர் பாராட்டி இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் மீது பொம்மன்- பெள்ளி அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொம்மன்-பெள்ளி அளித்த புகார்:
அதாவது, இந்த படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் கார்திகி கோன்சால்வ்ஸ் கண்டு கொள்ளவில்லை. செல்போனில் அழைத்து கூட இவர்களை பற்றி பேசவில்லை. மேலும், இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற திருமண காட்சிக்கு பொம்மன்-பெள்ளி தம்பதியிடமே இயக்குனர் கார்த்திகி பணம் வாங்கி இருக்கிறார். ஆனால், அதை அவர் கொடுக்கவும் இல்லை. இது தொடர்பாக அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சரியான பதிலும் அளிக்கவில்லை.
கார்திகி கோன்சால்வ்ஸ் மீதான புகார்:
இதனை அடுத்து இவர்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதன்பின் கார்திகி கோன்சால்வ்ஸ் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை பொம்மன் பெள்ளி இருவரும் வைத்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக கார்திகி கோன்சால்வ்ஸ் நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், கார்திகி கோன்சால்வ்ஸ் தங்களை மிரட்டுவதாக பொம்மன் சார்பு வழக்கறிஞர் தரப்பில் கோர்ட்டில் கூறப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து கார்திகி கோன்சால்வ்ஸ் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.